கோச்சடையான்: வசூலில் வெற்றியா.. தோல்வியா?

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தினை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்தது. ஈராஸ் நிறுவனம் வெளியிட்டது.

                                           
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் 3 நாட்களில் 42 கோடி வசூல் செய்ததாக படத்தினை வெளியிட்ட ஈராஸ் நிறுவனம் தெரிவித்தது. 'கோச்சடையான்' படத்தின் இறுதிக் காட்சியில் அடுத்த பாகத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன. தற்போது படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்

"கிடைத்த நேரத்திலும், பட்ஜெட்டிலும் 'கோச்சடையான்' படத்தினை பண்ணினோம். இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம். 'கோச்சடையான்' அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.

மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தினை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. வட இந்தியாவில் 'கோச்சடையான்' படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை தான்.

தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்" என்று முரளி மனோகர் தெரிவித்து இருக்கிறார்.

தயாரிப்பாளரின் இந்த பேச்சால் 'கோச்சடையான்' படத்தின் வசூல் வெற்றியா, தோல்வியா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.