கணவன் கண் முன்னே பயங்கரம் : கதற, கதற காதை அறுத்து பெண்ணிடம் நகை பறிப்பு

கணவன் கண் முன்னே இளம்பெண்ணின் சங்கிலியை பறித்ததோடு, காதிலிருந்த ஜிமிக்கியை கதறக் கதற பிளேடால் கொள்ளையர்கள் அறுத்துச் சென்றனர்.சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி மாரி. நேற்றுமுன்தினம் மாலை இருவரும் சொந்த வேலையாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்துக்கு டூவீலரில் சென்றனர்.


 பின்னர், இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந¢தனர். ஆலத்துப்பட்டி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், பின்னால் டூவீலரில் வந்த 2 பேர் மூர்த்தியின் டூவீலரை மறித்து நிறுத்தினர். அவர்களில் ஒருவர் திடீரென மூர்த்தியை கீழே தள்ளினார்.

மற்றொருவர் மூர்த்தியின் மனைவி மாரியின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்தார். அதுமட்டுமின்றி மாரி காதில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் ஜிமிக்கிகளை பிளேடால் அறுத்தனர். அவர் கதறித் துடித்தபோதும் கவலைப்படாமல் இரு காதுகளிலும் இருந்த ஜிமிக்கிகளை அறுத்து எடுத்தனர். இதனால், அவரது இரு காதுகளிலும் ரத்தம் கொட்டியது. பின்னர், கொள்ளையர்கள் 2 பேரும் டூவீலரில் தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த மாரியை, மூர்த்தி திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மாரி கொடுத்த புகாரின்பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.