உத்தரப் பிரதேசத்தில் பெண் நீதிபதி பலாத்காரம்

உத்தரப் பிரதேசம் அலிகாரில் பெண் நீதிபதி ஒருவர், உறவினர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது.

அலிகாரில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பில் பெண் நீதிபதி ஒருவர் (32) வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏணி வழியாக அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர், பெண் நீதிபதியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


அவர்களிடம் இருந்து தப்பிக்க பெண் நீதிபதி கூச்சலிட்டு உள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து அவரது வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியுள்ளனர். அவர் தொடர்ந்து கூச்சலிட்டு திமிறியபோது வாயில் துணியைத் திணித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியத்தால் பெண் நீதிபதி மயங்கி விழுந்தார். அடுத்தநாள் காலையில் வீட்டுப் பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீஸார் விரைந்து வந்து படுக்கை அறையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நினைவு திரும்பியதும் நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி நிதின் திவாரி ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியபோது, பெண் நீதிபதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாக உள்ளது. அவர் சிறிது உடல்நலம் தேறியதும் மருத்து வப் பரிசோதனை மேற்கொள்ளப் படும் என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பரூக்காபாதைச் சேர்ந்த பங்ராஜ் குப்தா, பரேலியைச் சேர்ந்த கோபால் குப்தா ஆகியோர் மீது பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். அவர்கள் இருவரும் பெண் நீதிபதியின் உறவினர்கள் ஆவர்.

சில நாள்களுக்கு முன்பு உத்த ரப் பிரதேசத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலை யில் பெண் நீதிபதி ஒருவரும் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.