ஆறாக ஓடிய கச்சா எண்ணெய்: குடங்களில் பிடித்த பொதுமக்கள்

சென்னை காசிமேடு அருகே பூமிக்கு அடியில் செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. சாலையில்ஆறாக ஓடிய எண்ணெய்யை அப்பகுதி மக்கள் வாளி, குடங்களில் பிடித்துச் சென்றனர்.

சென்ன துறைமுகத்தில் இறக்கப்படும் கச்சா எண்ணெய் ராட்சத குழாய் மூலம் மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு (சி.பி.சி.எல்) கொண்டு செல்லப்படுகிறது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த குழாய்கள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு உள்ளன.


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காசிமேடு, எஸ்.என்.செட்டித் தெரு, திடீர் நகர் பகுதியில் பூமிக்கடியில் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் மணலி சுத்திகரிப்பு ஆலைக்கு சென்ற கச்சா எண்ணெய் வெளியேறி தரையில் ஆறாக ஓடியது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் வழிந்து இருந்தது. அதிகாலையில் வானங்களில் சென்றவர்கள் பலர் எண்ணெய்யில் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. கச்சா எண்ணெய் வெளியேறியது பற்றி தெரிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் வாளி, குடங்களுடன் அங்கு திரண்டனர். அவர்கள் துணி மற்றும் பஞ்சு மூலம் எண்ணெய்யை பிழிந்து ஊற்றி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

தீ விபத்தை தவிர்க்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்தி எண்ணெய் வெளியேறிய பகுதியை ஆய்வு செய்தனர்.

காலை 9 மணியளவில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கச்சா எண்ணெய் வெளியேறாமல் இருக்க அருகில் உள்ள வால்வுகளை அதிகாரிகள் அடைத்தனர்.

கசிந்த எண்ணையில் தீப்பற்றி இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். தொடர்ந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.