காமவெறியால் பெண் இன்ஜினீயரை குழந்தைகளுடன் கொன்றதாக கொலையாளி

கோவை கணபதி அருகே உள்ள ராமகிருஷ்ணா நகர் ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் மருதமாணிக்கம். இவரது மனைவி வத்சலாதேவி (28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய குழந்தைகள் மகிலன் (6), பிரனீத் (11 மாதம்).

ஞாயிற்றுக்கிழமை இரவு வத்சலாதேவி, மகிலன், பிரனீத் ஆகிய மூவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.இது குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மாநகரக் காவல் உதவி ஆணையர்கள் பாஸ்கர், ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜோதி, சாலைராம் சக்திவேல் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலை தொடர்பாக மருதமாணிக்கத்திடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இருப்பினும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர்களது வீட்டுக்கு அருகேயுள்ள வீடுகளில் வசித்த இரு குடும்பத்தினர் சில நாள்களுக்கு முன் வீட்டைக் காலி செய்து சென்றது தெரியவந்தது. அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் கடைசியாக வீட்டைக் காலி செய்து சென்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆண்டிமுத்து மகன் செந்தில்குமார் (32) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.

அவரை போலீஸார் தேடிய போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது.தொடர் விசாரணை நடத்தியதில், அவர் மானாமதுரையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் அங்கு சென்ற போலீஸார், அவரைக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வத்சலாதேவியையும், அவரது குழந்தைகளையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் செந்தில்குமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கருங்கபாளையம். நான் எனது பெற்றோருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கோவை வந்துவிட்டேன். இங்கேயே 10–ம் வகுப்பு வரை படித்த நான் டிரைவர் தொழில் செய்து வந்தேன்.

எனது நண்பர்கள் கணபதி ரங்கநாதர் தெருவில் வசித்து வந்தனர். வத்சலா தேவியின் வீட்டுக்கு அருகில் அவர்களது வீடும் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் வீட்டுக்கு சென்றபோது முதல் முறையாக வத்சலா தேவியை பார்த்தேன்.

அவரது அழகில் மயங்கிய எனக்கு அவர் மீது ஆசை ஏற்பட்டது. அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று எண்ணினேன். அவரை பார்ப்பதற்காகவே அடிக்கடி நண்பர்கள் வீட்டுக்கு சென்று வந்தேன். அப்போது வத்சலா தேவி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு தனது குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டு இருப்பார். நண்பரிடம் பேசுவது போல் நின்று வத்சலா தேவியை ரசித்து வந்தேன்.

இதற்கிடையில் எனக்கும் லீலாவதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தேன். ஆனாலும் எனக்கு வத்சலா தேவியின் மீது இருந்த காமம் குறையவில்லை.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மருதமாணிக்கத்துக்கு சொந்தமான குடியிருப்பில் ஒரு வீடு காலியாக இருப்பதை அறிந்தேன். இதையடுத்து நான் எனது மனைவியுடன் அந்த வீட்டில் குடியேறினேன். எனது மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

எனக்கும், லீலாவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அப்போதெல்லாம் வத்சலா தேவியின் கணவர் மருதமாணிக்கம் தேவையில்லாமல் எனது குடும்ப விவகாரத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பார். என்னை கண்டிக்கவும் செய்வார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எனது மனைவி என்னுடன் கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். என் நடத்தை சரியில்லாத காரணத்தால் மருதமாணிக்கம் என்னை வீட்டை காலி செய்யும்படி கூறினார். இதையடுத்து நான் வீட்டை காலி செய்தேன். அப்போது வீட்டு அட்வான்ஸ் ரூ.2500 தொகையை மருதமாணிக்கம் பாக்கி வைத்திருந்தார்.

நான் வீடு காலி செய்த போது வத்சலாதேவி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மருத மாணிக்கத்திடம் மீதி தொகையை வாங்கலாம் என்று அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது வீட்டில் மருதமாணிக்கமும், வத்சலா தேவியும் இருந்தனர்.

அவர்களிடம் மீதி அட்வான்ஸ் தொகை குறித்து கேட்டேன். அப்போது மருத மாணிக்கம் வீடு காலியாக உள்ளது. வீட்டுக்கு ஆட்கள் யாராவது குடி வந்ததும் அவர்களிடம் அட்வான்ஸ் தொகை பெற்று பணத்தை திருப்பி தருவதாக கூறினார்.

அப்போது நான் எனக்கு தெரிந்த சிலர் உள்ளனர். அவர்களுக்கு வீடு தேவைப்படுகிறது. அவர்களை அழைத்து வந்து வீடு காட்டலாமா? என்று கேட்டேன். அவர்களும் அழைத்து வரும் படி கூறினர். அப்போது வத்சலா தேவியும், அவரது கணவர் மருதமாணிக்கமும் என்னுடன் நன்றாக பேசினர். அவர்களுக்கு என் மீது வெறுப்பு இல்லை என தெரிந்து கொண்டேன். இதையடுத்து அங்கிருந்து வெளியேறினேன்.

இந்த நிலையில் மாலை 4 மணிக்கு வத்சலா தேவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நான், "வீடு பார்க்க ஆட்களை அழைத்து வரட்டுமா?" என கேட்டேன். அதற்கு அவர், "என் கணவர் திருப்பூருக்கு சென்றுவிட்டார். மாமியாரும் வீட்டில் இல்லை. நான் மட்டும் குழந்தைகளுடன் தனியாக உள்ளேன். எனவே இன்று வீட்டுக்கு வர வேண்டாம். மற்றொரு நாள் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.

இதன்மூலம் வத்சலா தேவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்தேன். இன்று எப்படியாவது வத்சலா தேவியை அடைந்து விட வேண்டும் என முடிவு செய்தேன். மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வந்தேன். வீட்டில் 4.30 மணிக்கு மது அருந்தினேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் வத்சலா தேவியின் வீட்டுக்கு சென்றேன்.

வீட்டுக்குள் வத்சலா தேவி மட்டும் தனியாக ஹாலில் இருந்தார். அவரது குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. சின்ன பையன் படுக்கையறையில் இருந்தான். என்னை பார்த்ததும் வத்சலா தேவி என்னிடம், "இன்று தான் வீட்டில் யாரும் இல்லை வரவேண்டாம் என கூறினேனே? ஏன் இன்று வந்தாய்?" என கேட்டார்.

அப்போது நான் அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன். அவர் என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. திடீரென நான் அவரை கற்பழிக்க முயன்றேன். அவர் என்னை தள்ளிவிட்டுவிட்டு சத்தமிட்டவாறே பாத்ரூமிற்குள் ஓடினார்.

ஆத்திரமடைந்த நான் அவரை உயிருடன் விட்டால் என்னை சிக்க வைத்துவிடுவார் என எண்ணி தயாராக கொண்டு சென்றிருந்த கத்தியால் குத்தினேன். இதில் அவர் கழிவறைக்குள் கீழே விழுந்தார். பின்னர் அவரது கழுத்தை அறுத்தேன். இதில் சம்பவ இடத்திலேயே வத்சலா தேவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பைப்பில் தண்ணீரை திறந்து விட்டு ரத்தத்தை கழுவி விட்டேன்.

பின்னர் அங்கிருந்து வெளியேற தயாரானேன். கழிவறையில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வத்சலா தேவியின் முதல் மகன் மகிலன் நின்று கொண்டு இருந்தான். அவன் நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டு இருந்தது அப்போது தான் எனக்கு தெரிந்தது. அவனுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். அவன் என்னை காட்டிக் கொடுத்துவிடுவான் என பயந்து அவனையும் கொலை செய்ய முயன்றேன். அவன் என்னிடம் இருந்து தப்பித்து படுக்கையறைக்கு ஓடினான். அவனை துரத்தி சென்ற நான் படுக்கையில் அவனை தள்ளி 3 முறை கத்தியால் கொடூரமாக குத்தி கொன்றேன். அப்போது தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை பிரணீத் எழுந்து பசிக்கு அழ ஆரம்பித்தான்.

குழந்தையின் அழு குரல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவது வந்துவிட்டால் சிக்கல் ஆகிவிடும் என நினைத்த நான் 10 மாத குழந்தை பிரணீத்தை தொட்டிலில் வைத்து கத்தியால் குத்தி கொன்றேன். 3 பேரும் இறந்ததை உறுதி செய்த நான் அங்கிருந்து அவசரம் அவசரமாக என் வீட்டுக்கு சென்றேன்.

அங்கு இருந்த என் தாயிடம் நடந்தவற்றை கூறினேன். அவர்கள் என் ஆடையிலிருந்த ரத்த கறை கழுவினர். பின்னர் ஆடை மாற்றிய என்னை அங்கிருந்து தப்பித்து செல்லும்படி கூறினர். மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு மானாமதுரைக்கு சென்றேன். அங்கு பதுங்கியிருந்தபோது போலீசார் என்னை சுற்றி வளைத்து கைது செய்து விட்டனர். இவ்வாறு செந்தில் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.