முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்ட பிறகு பலாத்கார புகாரை பெண்கள் கூற முடியுமா?

‘‘ஒரு ஆணும், பெண்ணும் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்து கொண்ட பிறகு, ஏதாவது காரணத்தால் அந்த உறவு முறியும்போது சம்பந்தப்பட்ட ஆணின் மீது அந்த பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூற முடியுமா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணவும் முடிவு செய்துள்ளது.

 டெல்லியில் உள்ள பிரபல தனியார் வங்கியில் உயர் பதவியில் இருப்பவர் அஜித். சர்வதேச விமானம் ஒன்றில் பணியாற்றும் இளம்பெண் லைலா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). அஜித்துக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். லைலா திருமணம் ஆகாதவர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, 2 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தனர். அப்போது, இருவரும் பாலியல் உறவையும் வைத்து கொண்டனர். பின்னர், இவர்களுக்கு இடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் அஜித் மீது லைலா புகார் கொடுத்தார். இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி 8 அறிக்கைகளை தயாரித்தனர். ஒரு கட்டத்தில் அஜித்துக்கு ஆதரவாக விசாரணை அதிகாரி நடந்து கொள்வதாக லைலா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரியும் மாற்றப்பட்டு மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

டெல்லி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வரும் நிலையில், அஜித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், ‘இதுபோன்ற வழக்குகள் இப்போது அதிகமாகி வருகிறது.

 ஓர் ஆணும் பெண் ணும் பல நாட்கள் முழு சம்மதத்துடன் பழகி, பாலியல் உறவு வைத்து கொள்கின்றனர். ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும்போது, அந்த ஆணை பழி வாங்குவதற்காகவோ அல்லது பணம் பறிப்பதற்காகவோ அல்லது கட்டாயப்படுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ள வைக்கவோ, ஆண்களுக்கு எதிராக பாலியல் பலாத்கார சட்டத்தை பெண்கள் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த வழக் கில் பெண் கொடுத்துள்ள பாலியல் பலாத்கார புகார் உண்மையானது தானா? உள்நோக்கம் கொண்டதா? என்பதை விசாரணை நீதிமன்றம் ஜாக்கிரதையாக விசாரிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லைலா மேல்முறையீடு செய்துள்ளார். அதில், அஜித்து க்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்கும்படி கோரியுள்ளார். மேலும், அஜித் தன்னை ஆபாசமாக வீடியோ, புகைப்படங்கள் எடுத்து வைத்து கொண்டு மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

 விடுமுறை கால நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.கே.சிங் முன்னிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அஜித் சார்பாக மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா ஆஜாரானார். அப்போது, ‘‘குற்றம்சாட்டியுள்ள பெண் மிகவும் படித்தவர். கம்ப்யூட்டர் அறிவும் அதிகம் கொண்டவர். அஜித்துக்கு திருமணமாகி, 2 பிள்ளைகள் இருக்கின்றனர் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதை அஜித் ஒருபோதும் மறைக்கவில்லை. அப்படி இருந்தும், அஜித்தும் அவரும் பல மாதங்கள் நெருங்கி பழகியுள்ளனர். அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, லைலாவுடன் அஜித் பாலியல் உறவு வைத்து கொண்டதாக கூறப்படுவது தவறு. இருவருக்கும் இடையே முழு சம்மதத்துடன் பாலியல் உறவு இருந்து வந்துள்ளது.

மேலும், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பாலியல் உறவு கொள்வது, பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சமூகத்தில் இதுபோன்ற வினோத உறவை வைத்து கொள்வது இப்போது அதிகமாகி இருக்கிறது’’ என்று லுத்ரா வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இதை வினோத உறவு என்றோ முட்டாள்தனமான உறவு என்றோ கூறாதீர்கள். 

இது கள்ளத் தொடர்பு. இருப்பினும், ஆணுக்கும் பெண்ணுக்கும் முழு சம்மத்துடன் பாலியல் உறவு இருந்து, பின்னர் அவர்களின் உறவு முறியும்போது சம்பந்தப்பட்ட ஆணின் மீது அந்த பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூற முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இதில் உள்ள சட்ட கேள்விகள் பற்றி முழுமையாக விசாரிக்கப்படும்’’ என்று கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.