சூழ்நிலைக்கு ஏற்ப, ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு ஆதரவு

ராஜ்யசபாவில், அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், பா.ஜ.,வுக்கு ஆதரவு தரப்படும்,'' என, டில்லியில், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய பின், முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதேநேரத்தில், தே.ஜ., கூட்டணியில், அ.திமு.க., சேரலாம் என, கடந்த சில நாட்களாக வதந்திகள் உலா வந்தன. அப்படி எதுவும் நேற்று நடக்கவில்லை.

 

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்த, முதல்வர் ஜெயலலிதா, அவரிடம், தமிழகத்துக்கு தேவயான கோரிக்கைகளை, 64 பக்க அறிக்கையாக அளித்தார். 50 நிமிட சந்திப்புக்கு பின், தமிழ்நாடு இல்லம் திரும்பிய, முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருந்தது. சந்திப்பின்போது, பிரதமரிடம், தமிழகம் சார்பில் கோரிக்கை மனு அளித்தேன்.

 அவற்றில், முக்கிய பிரச்னைகளை குறிப்பிட்டுள்ளேன். பிரதமரிடம் நான் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும், அவர் மிகவும் பொறுமையுடன் கவனித்தார். எனக்கு அவர் அளித்த பதிலும் சாதகமாக இருந்தது. பல ஆண்டுகள், ஒரு மாநிலத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்தவர் என்பதால், மாநிலத்தின் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப முடிவெடுப்பார் என, நம்புகிறேன்.தே.ஜ.கூட்டணிக்கு, பார்லிமென்டில் போதிய பலம் உள்ளது. அதனால், எங்கள் கட்சியின் ஆதரவு தேவைப்படாது. ராஜ்யசபாவை பொறுத்தமட்டில், அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்போம்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.