அதிமுகவின் தம்பித்துரைக்கு துணைசபாநாயகர் வாய்ப்பு?

மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 9 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரான சுமத்ரா மகாஜன் புதிய சபாநாயகராகிறார். இவர் பாஜக மூத்த தலைவர் ஆவார்.


இந்த தேர்தலை தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதுகுறித்த விபரம் நாளை வெளியாகும். துணை சபாநாயகர் பதவியை பிரதான எதிர்க்கட்சிக்கு வழங்குவது நாடாளுமன்றத்தின் நடைமுறையாகும். ஆனால் பிரதான எதிர்கட்சியாக இருக்க வேண்டுமெனில் மக்களவையில் 10 சதவீதம் இடங்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்படி 54 எம்பிக்கள் உள்ள கட்சிக்கே எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

இந்நிலையில் பாஜகவிற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்காது. காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவிற்கு துணை சபாநாயகர் பதவியை கொடுக்க பாஜக தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 47 எம்பிக்கள் உள்ளனர். எனவே முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கு அதிமுக எம்பிக்கள் ஒத்துழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதிமுகவிற்கு துணை சபாநாயகர் பதவியை கொடுக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிமுக எம்பிக்கள் குழு தலைவராக உள்ள தம்பித்துரை துணை சபாநாயகர் ஆவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே 1980களில் துணை சபாநாயகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒருவேளை அதிமுக துணைசபாநாயகர் பதவியை ஏற்கமறுத்தால் அதற்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.