இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கும் விளையாட்டுகள் குறித்து ஒரு பார்வை

துப்பாக்கி சுடுதல்

இந்தமுறை 18 உட்பிரிவுகள் நீக்கப்பட்ட போதிலும் துப்பாக்கி சுடுதலில்தான் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தில்லியில் இப்போட்டியில் 30 பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ககன் நரங், விஜய் குமார், ஹீனா சித்து உள்ளிட்டோர் மீண்டும் அசத்தலாம்.

ஹாக்கி

குறைந்த பட்சம் ஆடவர் அல்லது மகளிர் ஹாக்கி அணியினரிடம் இருந்து ஒரு பதக்கத்தை எதிர்பார்க்கலாம். கடந்தமுறை ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தமுறை அரையிறுதியில் நியூஸிலாந்து அல்லது இங்கிலாந்தை வீழ்த்தினால் தங்கம் வெல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அவ்வளவு எளிதல்ல.

மகளிர் அணி முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது.

மல்யுத்தம்

கிரேக்க - ரோமன் மல்யுத்தத்தில் ஏழு பிரிவுகள் நீக்கப்பட்ட போதிலும் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 10 பதக்கங்கள் வரை கிடைக்கலாம். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷீல் குமார், யோகேஷ்வர் தத் இருவரும் முறையே 74 கிலோ, 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் எடைப் பிரிவில் பங்கேற்க இருப்பது சற்று சவால் அளிக்கும். இருப்பினும் அனுபவத்தின் மூலம் அவர்கள் சாதிக்க வாய்ப்புள்ளது. தவிர அமித் குமார், சத்யவர்த் காதியான், பவன் குமார் உள்ளிட்ட இளம் வீரர்கள் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.

தடகளம்

இந்தியாவின் பதக்க எண்ணிக்கை குறையும் மற்றுமொரு பிரிவு தடகளம். கடந்தமுறை இப்பிரிவில் இரண்டு தங்கம் உள்பட 12 பதக்கங்கள் கிடைத்தன. போதிய பயிற்சியின்மை, பெரும்பாலான வீரர்கள் ஃபார்மில் இல்லாதது, வெளிநாட்டு முன்னணி வீரர்களின் பங்கேற்பு ஆகியவை தடகளத்தில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களைப் பெற்றுத் தராது.

இருப்பினும், வட்டு எறிதலில் கிருஷ்ணா பூனியா, விகாஸ் கெளடா மீண்டும் சாதிக்கலாம். டிரிம்பிள் ஜம்ப் போட்டியில் அர்பிந்தர் சிங் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. 4ல400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மகளிர் அணி பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்மிண்டன்

சாய்னா நெவால் கடைசி நேரத்தில் விலகிய போதிலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் இரட்டையர் பிரிவில் தில்லியில் தங்கப் பதக்கம் வென்ற அஸ்வினி - ஜுவாலா ஜோடி மீண்டும் சாதிக்கும் வாய்ப்புள்ளது.

ஆடவர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மலேசியாவின் லீ சாங் வெய் விலகியுள்ளார். இதனால் தங்கம் இல்லையெனிலும் ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல காஷ்யபுக்கு வாய்ப்புள்ளது. குருசாய் தத்தும் பதக்க வாய்ப்புக்கு காத்திருக்கிறார்.

பளு தூக்குதல்

தடகளத்தில் இழக்கும் வாய்ப்பு பளு தூக்குதலில் ஈடுகட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் கடந்த ஆண்டு நவம்பரில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த உற்சாகத்தில் உள்ளனர். எனவே கடந்தமுறையைப் போலவே இந்தமுறையும் இப்பிரிவில் எட்டு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. பளு தூக்குதலில் சாதிக்கும் நைஜீரியா போதிய பயிற்சி இல்லாமல் வருவது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

குத்துச்சண்டை

2010-ம் ஆண்டைப் போலவே குத்துச் சண்டையில் ஏழு பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மனோஜ் குமார், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் இடம்பெற்றிருந்தபோதிலும் மூன்று தங்கப் பதக்கங்கள் கிடைப்பது சிரமமே. முதன்முறையாக 51 கிலோ, 60 கிலோ, 75 கிலோ எடைப் பிரிவில் மகளிர் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆசிய சாம்பியன் சரிதா தேவி நிச்சயம் ஒரு பதக்கம் வென்று தருவார் என நம்பலாம்.

டேபிள் டென்னிஸ்

கடந்தமுறை தங்கப் பதக்கம் வென்ற சரத் கமல் தலைமை வகிக்கும் டேபிள் டென்னிஸில் குறைந்தது இரண்டு பதக்கங்கள் கிடைக்கலாம்.

இதுதவிர, ஜிம்னாஸ்டிக் போட்டியில் தில்லியில் பதக்கம் வென்ற ஆஷிஸ் குமார் இம்முறையும் சாதிக்க வாய்ப்புள்ளது. 2002ம் ஆண்டுக்குப் பின் காமன்வெல்த் போட்டியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஜுடோவில் குறைந்தது இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கிடைக்கும்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் பிரசந்தா கர்மகர் நீச்சல் பிரிவில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.