கல்லூரி மாணவி நள்ளிரவில் காரில் கடத்தி பலாத்காரம்

பெங்களூர் பிரேசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் திரிஷா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் கல்லூரி மாணவி. வெள்ளிக்கிழமை இரவு இவர் தனது நண்பரின் உணவு விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். உடன் ஒரு ஆண் நண்பர், 2 தோழிகள் சென்றனர். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அனைவரும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். முதலில் திரிஷாவின் தோழிகள் இருவரையும் வீட்டில் டிராப் செய்த நண்பர், இறுதியாக திரிஷாவை அவர் வீட்டில் இறக்கிவிட பிரேசர் டவுனுக்கு சென்றார். நள்ளிரவு 1.30 மணிக்கு திரிஷாவின் குடியிப்பு முன்பு காரில் அமர்ந்தபடி இருவரும் பேசி கொண்டிருந்தனர். 

அப்போது, மற்றொரு காரில் வந்த 4பேர் கொண்ட கும்பல், திரிஷாவையும், ஆண் நண்பரையும் வாயை பொத்தி அவர்களது காரில் கடத்தி சென்றனர். காக்ஸ்டவுன் ரயில் தண்டவாளம் அருகே காரை நிறுத்தி கத்தி முனையில் திரிஷாவை பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது. மறுநாள் புலிகேசிநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற திரிஷா மற்றும் நண்பர்கள் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். கடத்தல், பாலியல் தொந்தரவு உள்பட 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, திரிஷாவை கடத்தி சென்ற கார் எம்.எம் ரோடு பகுதியில் நிற்பதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை முற்றுகையிட்ட போலீசார் காரை எடுத்து சென்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் எம்.எம். சாலையை சேர்ந்த ஹைதர் நசீர் (23) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து, தலைமறைவாகவுள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.