கரடியுடன் சண்டை போட்டு உயிர் பிழைத்த தொழிலாளி

குன்னூர் அருகே தோட்டத் தொழிலாளி ஒருவர் கரடியுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டார். 30 நிமிடம் நடந்த இந்த போராட்டத்தில் அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

 கொலகம்பை, தூதூர்மட்டம், சட்டன், உலிக்கல், அரையட்டி ஆகிய பகுதிகளில் பகல் நேரத்திலேயே குடியிருப்பு மற்றும் களமடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை குன்னூர் அடுத்த பில்லிமலை எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் ஒரு கரடி குட்டியுடன் நடமாடிக் கொண்டிருந்தது.

தோட்டத் தொழிலாளி ரஞ்சித் (24) என்பவர் வேலைக்காக தேயிலை தோட்டத்துக்குள் நடந்து சென்றார். அப்போது செடிகளுக்குள் நின்று கொண்டிருந்த குட்டி கரடியை அவர் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டார். இதனால் குட்டி கரடி அவர் மீது பாய்ந்தது. அதை தூக்கி வீசிவிட்டு ரஞ்சித் தப்பி ஓடினார். குட்டியை தூக்கி வீசியதால் ஆத்திரம் அடைந்த தாய் கரடி அவரை துரத்திச் சென்று பிடித்தது. 

அந்த கரடியுடன் ரஞ்சித் கட்டிப் புரண்டு சண்டை போட்டார். 30 நிமிடமாக கரடியுடன் போராடினார் ரஞ்சித். அவரது சத்தத்தை கேட்டு மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்தனர். கரடியை அங்கிருந்து அடித்து விரட்டினர். படுகாயம் அடைந்த ரஞ்சித்தை குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டப்பகலில் தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.