இனியாவது ராகுல் காந்தி விழித்துக் கொள்வாரா?

காங்கிரஸ் கட்சி கடந்த ஒரு வாரமாக மிகப்பெரிய சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அந்த மாநிலங்களில் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது, கட்சித் தலைமையை நிலைகுலைய வைத்திருக்கிறது.

கடந்த வாரம், ஒரே நாளில் அஸ்ஸாமிலும், மகாராஷ்டிரத்திலும் இரண்டு மூத்த தலைவர்கள் பதவி விலகி இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவி இருக்கிறார்கள். வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிடுவது என்று காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் முடிவெடுத்த சில மணி நேரங்களில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகினார். இதேபோல, இன்னும் பல காங்கிரஸ் கட்சியினர் ஹரியாணா மாநில அமைச்சரவையிலிருந்து விலகக்கூடும் என்று தெரிகிறது.

இதற்கெல்லாம் முன்னோடியாக, கடந்த ஒரு மாதமாகவே அஸ்ஸாம், மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களின் முதல்வர்களை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக இருந்து வருகிறது. முதலமைச்சரை மாற்ற விரும்பும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சிலரது ஆதரவும் ஊக்கமும் இருக்கிறது என்பது அனைவருமே அறிந்த ஒன்று.

இந்தக் கோரிக்கைகள் எழுந்ததுமே, கட்சித் தலைமை, ஒன்று, அதிருப்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும், அல்லது இதுபோன்ற முயற்சிகளை ஆரம்பத்திலேயே கண்டித்து அடக்கி இருக்க வேண்டும். இரண்டையுமே

செய்யாமல் கட்சித் தலைமை வேடிக்கை பார்த்ததால், இப்போது மாற்றமில்லை என்று அறிவித்தும்கூட அதிருப்தியாளர்கள் அடங்கிப் போகவோ தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருக்கவோ மறுக்கிறார்கள்.

இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வர இருப்பதால், இப்போது உறுப்பினர்களாக இருப்பவர்களும், தேர்தலில் போட்டியிட ஆசைப்படுபவர்களும் கொதிப்படைந்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவினால், தங்களது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று அவர்கள் யோசிப்பதில் தவறில்லை.

அகில இந்தியத் தலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது என்பது எல்லா காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தெரியும். நிர்வாக ரீதியான மாற்றங்களால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்பதையும் உணர்ந்தவர்கள் அவர்கள். மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய, கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் தலைமைதான் அவர்களின் எதிர்பார்ப்பு. அதன்மூலம்தான் காங்கிரஸýக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தேர்தல் படுதோல்வியால், காங்கிரஸ் தொண்டர்கள் நிலைகுலைந்து போயிருப்பது என்னவோ நிஜம். 1977-இல்கூட சந்தித்திராத மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் சந்தித்திருக்கிறது. கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸýக்குக் கிடைத்த 29% வாக்குகள்கூட 2014-இல் 19.3% ஆகக் குறைந்து விட்டிருப்பதும், மக்களவையில் பிரதான எதிர்கட்சிக்கான அந்தஸ்தைப் பெற்றுத்தரும் 10% இடங்களைக்கூட பெற முடியாததும் அவர்களை மிகவும் சோர்வடைய வைத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி கூறியிருப்பதுபோல, குறுகிய வாக்கு வங்கி அரசியல்தான் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம் என்பதை உணர்ந்து, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைத் திட்டத்தை வகுத்து, அமைப்பு ரீதியாக அடிமட்டத்திலிருந்து தலைமை வரை கட்சி சீரமைக்கப்பட வேண்டும் என்பதுதான், கட்சித் தொண்டர்களின் கோரிக்கையாகும்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக ராகுல் காந்தி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயை தேர்ந்தெடுக்கச் செய்தது, தவறான எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சோனியா காந்தியால்கூட, தனது மகன் ராகுலைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதும் அவர்களது ஏமாற்றத்தை அதிகரித்திருக்கிறது.

அரசியலில் வெற்றிப் பாதையில் கட்சித் தலைமை தங்களை இட்டுச் செல்லாது என்று தெரிந்தால், மூழ்கும் கப்பலிலிருந்து கடலில் குதிக்கும் எலிகளைப்போல, கட்சியிலிருந்து பலரும் தாவத் தயாராவது இயற்கை. இனியாவது ராகுல் காந்தி விழித்துக் கொள்வாரா?