லிங்கா ஐதராபாத் படப்பிடிப்பு ஓவர்!

கோச்சடையான் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ’லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார் என்பது எலோருக்கும் தெரியும்.கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். முதற் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தவர்கள் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் சரித்திரகால செட் அமைத்து படமாக்கி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுடன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். இதையடுத்து படக்குழுவினர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

காரணம், லிங்கா படப்பிடிப்பு ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் படமாகாமல் வேறு மாநிலங்களிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இது இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. தற்போது அந்தக் குறையைப் போக்குவதற்காக அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதென முடிவெடுத்திருக்கிறாராம்.