33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் 'மங்கள்யான்'

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ மையம் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல 33 நாட்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் (MOM) செவ்வாய் கிரகத்தில் இருந்து 9 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பூமியில் இருந்து 189 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இன்னும் 33 நாட்களே உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இதேபோல் ஆகஸ்டிலும் ஒரு நிகழ்விற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.