94 குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையாது

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கு பலியான குழந்தைகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் பெற்றோர், காயமடைந்த குழந்தைகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் சிலரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் காலையிலிருந்தே காத்திருந்தனர்.

மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி முகம்மது அலி, முற்பகல் 11.15 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார். அப்போது, மொத்தமுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட 21 எதிரிகளில் 11 பேரை விடுவிப்பதாகவும், மீதமுள்ள 10 எதிரிகளுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் 1.25 மணிக்கு நீதிமன்றம் கூடியதும், குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கில் 10 பேருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தாலும், 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கு தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோர் கருத்து

சூரியகுமாரி: ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்காணிப்பது அதிகாரிகள் தான். ஆனால், அந்த அதிகாரிகளில் சிலரை நீதிமன்றம் தற்போது விடுவித்துள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாவது வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு மாற்றப்பட வேண்டும். இங்கு வழங்கப்படும் தீர்ப்பு தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்.

சித்ரா : நாங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர். எங்கள் குழந்தைகளை பலிகொடுத்துவிட்டு, நீதிமன்றம் அதற்கு காரணமானவர்களை தண்டிக்கும் என்று நம்பி தான் 10 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கினாலும் அதில் தவறில்லை. எதிரிகள் மேல்முறையீடு செய்தாலும் தண்டனையை குறைக்கக் கூடாது என்றார்.

மகேஸ்வரி : நீதியை மதித்து தான் நல்ல தீர்ப்பு கிடைக்குமென 10 ஆண்டுகள் காத்திருந்தோம். 11 பேர் விடுவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. பிள்ளைகளை பலிகொடுத்து விட்டு பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்காவிட்டால், இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையாது என்றார்.

இன்பராஜ் : தற்போது நீதிமன்றம் 10 பேருக்கு வழங்கியுள்ள தண்டனையை வரவேற்கிறோம். ஆனால், 11 பேர் விடுவிக்கப்பட்டது சரியானதல்ல. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றார்.

தீ விபத்தில் காயமடைந்த மாணவர் விஜய் கூறியது: கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம் நடைபெறும் போது நான் அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தற்போது நாமக்கல்லில் ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வருகிறேன். இந்த வழக்கில் 11 பேரை விடுவிக்க 10 ஆண்டுகள் ஏன் காத்திருக்க வேண்டும். ஒரே ஆண்டில் இதனை செய்திருக்கலாமே. சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.

சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆனாலும் எனது உடலில் உள்ள தீ காயங்களை பார்த்து விட்டு கேட்பவரிடம் அந்த சம்பவத்தை விவரிக்கும் போது கண்களில் நீர் வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இந்த வழக்கில் முழுமையான தண்டனை உரியவர்களுக்கு கிடைக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.