ரூ.8,000 கோடி வருமானத்தை கொட்டும் மது கடைகளுக்கு மூடுவிழா

ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானத்தை கொட்டி கொடுக்கும் மது கடைகளையும், பார்களையும், அடுத்த பத்து ஆண்டுகளில் படிப்படியாக ஒழிக்க கேரள அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. இதன் முதல் கட்டமாக 730 பார்கள் மூடப்படுகின்றன.‘‘கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முழு மதுவிலக்கை கொண்டுவரும் அரசின் மது கொள்கை பற்றிய அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் வரும் 26ம் தேதி தாக்கல் செய்யப்படும்’’ என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியிலுள்ள பல கட்சிகள் கோரின. மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரனும் இதை வலியுறுத்தி வந்தார்.இந்நிலையில், தரமில்லாத மதுக்கடை பார்களை மூட கேரள உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதையடுத்து, 418 பார்கள் மூடப்பட்டன. இதை எதிர்த்து சில பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசின் மது கொள்கையை தெரிவிக்கும்படி உத்தரவிட்டது.

அதையடுத்து, கூட்டணி கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுவிலக்கை படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றுவது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தில் மது கொள்கையை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது:அரசின் மது கொள்கையை இறுதி செய்துள்ளோம். 

மாநிலத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். தரம் இல்லாததால் புதுப்பிக்கப்படாத 418 பார்களுக்கான உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், 312 பார்களுக்கான உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். இதற்காக பெறப்பட்ட ஸி45 கோடியை அரசு திரும்ப செலுத்தும். மொத்தம் 730 பார்கள் மூடப்படுகின்றன. இனி 5 நட்சத்திர தரம் கொண்ட பார்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

மாநில மது கார்ப்பரேஷன் மூலம் 14 மாவட்டங்களில் 334 விற்பனை மையங்கள் செயல்படுகின்றன. இனி ஆண்டுதோறும் இதில் 10 சதவீதம் குறைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து விற்பனை மையங்களும் மூடப்படும். பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். தற்போது இந்த விற்பனை மையங்களுக்கு மாதத்தின் முதல் தேதி விடுமுறையாக உள்ளது. இனி அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறையாக இருக்கும்.உயர் நீதிமன்றத்தில் அரசின் மது கொள்கையை வரும் 26ம் தேதி தாக்கல் செய்ய உள்ளோம். அதற்கடுத்த நாள் அமைச்சரவை கூட்டத்தில் இந்த கொள்கைக்கு முறையான அனுமதி பெறப்படும்.

பாதிக்கப்படும் பார் ஊழியர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். மதுவிலக்கு பிரசாரம் மற்றும் குடியால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வுக்கு என தனி நிதி உருவாக்கப்படுகிறது. இந்த நிதிக்கு மாநிலத்தில் உள்ள அனைவரும் தங்கள் ஒருநாள் சம்பளத்தை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இந்த நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வந்துள்ளது.இவ்வாறு உம்மன் சாண்டி தெரிவித்தார்.அரசின் இந்த முடிவால் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயின் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனை மூலமே கிடைத்து வந்தது. கடந்த 201314ம் நிதியாண்டில் மது விற்பனை மூலம் ரூ.8,433 கோடி வருவாய் கிடைத்தது.


மது விலக்கு சாத்தியமா?

* தற்போது குஜராத், மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் முழு மதுவிலக்கும், மணிப்பூர் மாநிலத்திலும், லட்சத்தீவுகளிலும் பகுதியாக மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது.

* 194850களில் அப்போதைய சென்னை மாகாணமும், மும்பை மாநிலமும் முழு மதுவிலக்கை அமல்படுத்தின. 19581969 கால கட்டத்தில் மெட்ராஸ் மாகாணம், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திராவின் 11 மாவட்டங்களில் மதுவிலக்கு இருந்தது. அசாம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது.

* 1954ல் நாட்டின் நான்கின் ஒரு பகுதியில் மதுவிலக்கு இருந்தது.

* நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு விசாரணை குழு 1958ல் அமைக்கப்பட்டது. மது விற்பனையால் கிடைக்கும் வருமானத்தை இழக்க மாநிலங்கள் விரும்பாததால் அது கைவிடப்பட்டது.

* 1977ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர முயன்றார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

* 200409ல் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், தேசிய மதுக் கொள்கை மற்றும் பூரண மதுவிலக்கு கொண்டு வர முயன்றார்.

* தமிழ்நாடு அடங்கிய மெட்ராஸ் மாநிலத்தில் 1952ல் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ராஜாஜி. பிறகு தமிழ்நாடு உருவான பிறகும் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. 1972ல் விலக்கப்பட்ட மதுவிலக்கு, 1973ல் மீண்டும் கொண்டு வரப்பட்டது. 1977ல் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. தற்போது அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுவிற்பனை நடைபெறுகிறது.