2014 தீபாவளிக்கு மோதும் ஸ்டார் படங்கள்!!

பண்டிகை நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவது என்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றுதான்.அதுவும் பொங்கல், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டிபோட்டுக் கொண்டு ரேஸில் குதிக்கும். அதேபோல தான் இந்த வருட தீபாவளியும் இருக்கப் போகிறது. ஏற்கெனவே இந்த தீபாவளி ரேஸில் விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை என இரண்டு படங்கள் களத்தில் உள்ளன.

தற்போது இந்த ரேஸில் தனுஷின் ’அனேகன்’ படமும் குதிக்கவிருக்கிறதாம். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமீரா தஸ்தர் நடிக்கும் அனேகம் படம் இப்போது இறுதிகட்டத்தில் உள்ளதாம். இன்னும் ஒரே ஒரு டூயட் பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டுமாம். இந்தப் பாடல் காட்சியை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த். அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம்.

ஆகவே, விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ படங்களுடன் தனுஷின் ‘அனேகன்’ படத்தையும் தீபாவளி ரேஸில் ஓடவிடத் தயாராகி வருகிறார்கள். இவைதவிர, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் "ஐ" திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளதால் இந்த படமும் தீபாவளி போட்டியில் குதிக்க வாய்ப்பு உள்ளது. ரஜினி நடித்து வரும் லிங்கா டிசம்பரில் வெளியாக இருப்பதாக கே.எஸ்.ரவிகுமார் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.