ரூ.1 லட்சம் காப்பீடு வசதி

ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வசதியுடன் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 1½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.

புதுடெல்லி, 

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

வங்கி கணக்கு திட்டம்

நாட்டில், வங்கி கணக்கு இல்லாத 7½ கோடி பேருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்குவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் அரசு நலத்திட்டங்கள் மூலம் நேரடியாக பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.

வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம்.கார்டு போன்ற ‘ரூபே கார்டு’ வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.கள் மூலம் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் வரை மிகைப்பற்று வசதியும் உண்டு. மேலும் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் கிடைக்கும். மத்திய- மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை அவர்கள் தங்கள் வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.

ஜன்தன் யோஜனா திட்டத்தின் தொடக்க விழா டெல்லியில் விஞ்ஞான பவன் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கிவைத்தார். திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் 10 பேருக்கு அவர் வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கினார்.

நிதி மந்திரி அருண் ஜெட்லி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன், பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டார்.

திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது:-

77 ஆயிரம் முகாம்கள்

இன்று ஒரு முக்கியமான நாள் ஆகும். இன்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 77 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, 1½ கோடி பேருக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இன்று வங்கி கணக்கு தொடங்கியதன் மூலம் 1½ கோடி பேர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் தங்களை இணைத்துக்கொண்டு உள்ளனர். இது தேசத்தின் மிகப்பெரிய சாதனை ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ், வருகிற ஜனவரி 26-ந் தேதிக்குள் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்படும். இன்று முதல் வருகிற ஜனவரி 26-ந் தேதி வரை வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஆயுள் காப்பீட்டுடன், ரூ.1 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வசதியும் கிடைக்கும். மேலும் அவர்களுக்கு, தங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் வரை மிகைப்பற்றும் கிடைக்கும்.

மானியங்கள்

இதனால் கிராமப்புற ஏழை மக்கள் தங்கள் பணத்தேவைக்காக தனியாரிடம் போய் நிற்க வேண்டிய நிலை ஏற்படாது. அவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளும் ஏற்படும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பொருளாதார அடிமைத்தளையில் இருந்து மீட்பது மிகவும் அவசியம் ஆகும். இந்த திட்டத்தின்படி அரசின் மானியங்கள் பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கின் மூலம் நேரடியாக வழங்கப்படுவதால் ஊழலை தடுக்க முடியும்.

மகாத்மா காந்தி சமுதாயத்தில் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார். வறுமையை ஒழிக்க வேண்டுமானால் முதலில் நாம் நிதி தீண்டாமையை ஒழிக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நமது நிதித்திட்ட முறையுடன் இணைக்க வேண்டும். அதற்கு இந்த திட்டம் ஊக்கம் அளிப்பதாக அமையும்.

வங்கி சேவை

நமது நிதி பரிமாற்ற திட்டங்கள் ஏழைகளின் வீடு வரை செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 1969-ம் ஆண்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் 68 சதவீத மக்களுக்கு வங்கி கணக்குகள் கிடையாது என்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட கிராமங்களுக்கு வங்கி சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும்.

வறுமையின் பிடியில் இருந்து ஏழைகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் செய்து வருகிறது. இது எங்கள் கடமை ஆகும். கிராமப்புற ஏழை பெண்கள் பொருளாதார அடிமைத்தளையில் இருந்து விடுபட ஜன்தன் யோஜனா திட்டம் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.