குரூப் 4 தேர்வு அறிவிக்கை: அடுத்த மாதம் வெளியாகிறது

சுமார் 3 ஆயிரம் பணியிடங்களை உள்ளடக்கிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) எஸ்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த 20 நாள்களுக்குள் வெளியிட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், குரூப் 4 பிரிவில் சுமார் 3 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும்.

உதவி கால்நடை மருத்துவர் பதவியில் சுமார் 686 காலிப் பணியிடங்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையும், சுமார் 315 காலியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான அறிவிக்கையும் விரைவில் வெளியிடப்படும்.

உதவி பணி மேலாளர் பதவி, 162 உரிமையியல் நீதிபதி பதவிக்கான அறிவிக்கைகளும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.