ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

விருதுநகர் மாவட்டத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைகள் உள்ள இடங்களில் ஏழ்மை நிலையில் படித்து வரும் மாணவிகளை தத்தெடுக்கும் வகையிலான யூனியன் ஆதர்ஷ் கிராம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தத்தெடுக்கப்படும் மாணவிகளுக்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயில்வதற்காக ஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், மதுரை மண்டலத்தில் 12 மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளின் மூலம் ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த வங்கிக் கிளைகள் செயல்படும் வத்திராயிருப்பு, பந்தல்குடி, கிருஷ்ணன்கோவில், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் ஏழ்மையான நிலையிலுள்ள தலா 5 மாணவிகள் வீதம் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவிகளுக்கு நிகழாண்டு முதல் ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த மாணவிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கினார். உடன் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் மண்டல மேலாளர் இ.புல்லாராவ், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, விருதுநகர் கிளை மேலாளர் எம்.வி.பொன்னுச்சாமி, அலுவலர்கள் குணாளன், ஜலபதி, அழகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.