இதிலும் வந்தாச்சு ஆடிக் கழிவு!

ஆடி மாதம் வந்தாலே ஜவுளி, நகைக் கடைகளின் ஆச்சர்ய விளம்பரங்களால் மக்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை. ஆனால், சாலையோரத்தில் விற்கப்படும் நர்சரி செடிகளுக்கும் ஆடிக்கழிவு தந்து அசத்தி வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த வியாபாரி.

வண்ணார்பேட்டையைச் சேர்ந்த வேம்பு என்பவர், பாளையங்கோட்டையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான கேண்டீன் அருகே சாலையோரம் பூ மற்றும் பழச் செடிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், பட்ரோஸ், ஊட்டி ரோஜா என பல்வேறு வகையான மலர்ச் செடிகளையும், மா, பலா, தென்னை, கொய்யா, எலுமிச்சை, நார்த்தை, மாதுளை உள்ளிட்ட பழச் செடிகளையும் விற்பனை செய்து வருகிறார்.

இவை மட்டுமல்லாது சந்தனம், தேக்கு உள்ளிட்ட மரச் செடிகளும், நிழல் தரும் மரச் செடிகளும் விற்பனை செய்து வருகிறார்.

வீட்டுத் தோட்டம், வீட்டு மாடிகளில் தோட்டம் வைத்துள்ள பலரும் இவரிடம் செடிகளை வாங்கிச் செல்கின்றனர். ஆடி மாதத்தில் ஜவுளி, நகை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு தள்ளுபடி அளித்து விற்பனை செய்யும் உத்தி பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளதை அறிந்து, செடிகளுக்கும் இவர் ஆடிக் கழிவு அளித்து வருகிறார். இவரிடம் ரூ.15 முதல் ரூ.500 வரையில் ரகம் வாரியாகவும், செடி வாரியாகவும் கன்றுகள் உள்ளன. மலர்ச் செடிகளை பெருமளவு பெங்களூரு, ஒசூர், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார். இப்போது ஆடிக் கழிவை முன்னிட்டு, செடியின் விலையில் தலா ரூ.5 தள்ளுபடி செய்து விற்பனை செய்கிறார். ரூ.30 விலையுள்ள செடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக, பூச் செடிகளை விற்பனை செய்யும் தொழிலாளி லட்சுமி நாராயணன் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விற்பனையில் உள்ளேன்.

ஆடிக் கழிவு என்பதால் வழக்கமாக விற்பனையாகும் செடிகளைவிட இருமடங்கு அதிகம் விற்பனையாகிறது. எங்களிடமுள்ள செடிகள் தரமாக இருப்பதால் வாங்கிச் செல்வோரும் பிறருக்கு அறிமுகம் செய்து கடையைத் தேடி வருகின்றனர் என்றார் அவர்.