'காதலிக்க நேரமில்லை’ படத்தின் பொன்விழாக் கொண்டாட்டம்

50 வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இயக்குனர் ஸ்ரீதரை பெரும் உச்சத்தில் நிறுத்திய திரைக் காவியமான இந்தப் படத்தின் பொன்விழா ஆண்டை இன்று சென்னையில் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை' திரைப்படம் நகைச்சுவையுடன் கூடிய முழு நீள காதல் படம். நகைச்சுவைத் திரைப்படம் என்ற பெயருக்கே தனித்த அடையாளத்தை ஏற்படுத்திய படம் இது.

ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன் என்று பலரது நடிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

1964-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வெளியான இந்தப் படம் இப்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இன்று மாலை 6 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்தப் படத்தின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இந்த விழாவில் காதலிக்க நேரமில்லை படத்தில் பங்கெடுத்த நட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

‘மாடி மேலே' , ‘என்ன பார்வை', ‘ உங்கள் பொன்னான கைகள்', ‘அனுபவம் புதுமை', ‘ நாளாம் நாளாம்', ‘மலரென்ற முகமொன்று', ‘காதலிக்க நேரமில்லை', ‘ நெஞ்சத்தை அள்ளிஅள்ளித் தா' என இந்தப் படத்தில் இடம்பெற்ற எட்டுப் பாடல்களும் இன்றும் திரை இசை ரசிகர்களைக் கிறங்கடிக்க வைக்கும் பாடல்கள்.