இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.லண்டனில் நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய - இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து இந்தப் போட்டியை டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடலாம். ஆனால் இந்திய அணியோ தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை ஏற்கேனவே இழந்துவிட்ட நேரத்தில் தொடரை சமனில் முடிக்கவேண்டுமெனில் 5-வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், பரிதாபத் தோல்வியுடன் தொடரை இழந்துள்ளது இந்தியா.

ஆட்டத்தின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்களில் மிகவும் மோசமாக சுருண்டது.

துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 2 ரன்னிலும், கம்பீர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா 11 ரன்களையும், விராட் கோலி 20 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஹானே 4 ரன்களை மட்டுமே எடுத்தார். தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் 7 ரன்களும் புவனேஷ்வர் குமார் 4 ரன்களும் மட்டுமே எடுத்தனர். ஆரோன் ஒரு ரன்னிலும், இஷாந்த் சர்மா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் வோக்கீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, இப்போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ்சை ஆடிய இங்கிலாந்து 116.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 486 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரூட் ஆட்டமிழக்காமல் 149 ரன்களைக் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.