மயங்கி விழுந்த கணவரை புதைக்க முயன்ற மனைவி

போச்சம்பள்ளி அருகே கட்டையால் அடித்ததில் மயங்கிய கணவனை மூட்டை கட்டி தூக்கி சென்று புதைக்க முயன்ற மகளிர் சுய உதவிக்குழு தலைவியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்னபாலே தோட்டத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (40) விவசாயி. இவரது மனைவி மலர் (35). 

அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். கணவர் அர்ஜூனனுக்கு தெரியாமல், சுய உதவிக்குழுவில் மலர் கடன் வாங்கி உள்ளார் கடனை திருப்பி செலுத்தவில்லை. நேற்று முன்தினம் காலை குழுவின் உறுப்பினர்கள் மலரின் வீட்டிற்கு சென்று, கடனை கட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அர்ஜுனன், கடனை வாங்கி என்ன செய்தாய் என்று மனைவியிடம் கேட்டுள்ளார். 

 இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மதியமும் இந்த பிரச்னையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மலர், கட்டையால் கணவரின் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அர்ஜுனன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

கணவர் இறந்துவிட்டதாக நினைத்த மலர், சாக்கு பையை எடுத்து கணவர் உடலை மூட்டை கட்டினார். பின்னர் அதை புதைக்க திட்டமிட்டுள்ளார். அந்த சமயத்தில், அர்ஜூனனின் செல்போனிற்கு அழைப்பு வந்தது. மலர் எடுத்து பேசியபோது, அர்ஜுனன் எங்கே என்று அவரது நண்பர் கேட்டுள்ளார். அப்போது மலர், மாறி மாறி பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த அர்ஜுனனின் நண்பர் வீட்டிற்கு வந்து பார்த்த போது அர்ஜுனன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது.

 அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அர்ஜுனனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. போலீசார் மலரிடம் விசாரணை நடத்தியதில் கணவரை தாக்கியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.