தமிழக மின்வாரிய சாயம் வெளுத்தது

மின் தேவையை ஈடு செய்யும் அளவிற்கு, மின்சாரம் உற்பத்தி ஆகாததால், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புக்கு மாறாக, தமிழகத்தில், மீண்டும், மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில், நாள்தோறும், சராசரியாக, மின் தேவை, 12 ஆயிரம்; மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது.

நான்கு மணி நேரம்:

இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில், சென்னையில், இரண்டு மணி நேரம்; மற்ற பகுதிகளில், மூன்று - நான்கு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.தொழிற்சாலைகளுக்கு, பகலில், 40 சதவீதம்; மாலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, 90 சதவீதம் மின்தடை அமல்படுத்தப்பட்டது.கடந்த ஆண்டு அக்டோபரில், வல்லூர், 500; வட சென்னை விரிவாக்கம், 1,200; மேட்டூர் விரிவாக்கம், 600 ஆகிய, புதிய அனல் மின் நிலையங்கள் மூலம், 2,300 மெகாவாட், கூடுதல் மின்சாரம் கிடைத்தது.கடந்த பிப்ரவரி முதல், கோடை வெயில் சுட்டெரித்ததால், புதிய மின் நிலையங்களில், கூடுதல் மின்சாரம் கிடைத்தும், நாள்தோறும், 1,000 - 1,200 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது.இதனால், லோக்சபா தேர்தல் என கூட பார்க்காமல், பல மணி நேரம், மின்தடை செய்யப்பட்டது.

உத்தரவு:

கடந்த ஏப்ரல் முதல், காற்றாலை சீசன் துவங்கியதால், அதில் இருந்து, நாள்தோறும், 2,000 - 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது.இந்நிலையில், 'காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த, மின் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். ஜூன் முதல் கிடைக்க பெறும் காற்றாலை மின்சாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில், இதுவரை அமலில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும், ஜூன் 1ம் தேதி முதல், அறவே நீக்க உத்தரவிட்டுள்ளேன்' என, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மே மாதம் இறுதியில் அறிவித்தார்.

தொழில்நுட்ப கோளாறு:

முதல்வர் ஜெயலலிதா கூறியது போலவே, காற்றாலைகளில் இருந்து, நாள்தோறும், 3,000 - 3,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது.ஆனால், மின் வாரிய அதிகாரிகள், முதல்வர் உத்தரவுக்கு மாறாக, 'அனல் மின் நிலையங்களில், அதிக மின்சாரம் கிடைக்கிறது; காற்றாலை மின்சாரம் நிலையாக கிடைக்காது; தொழில்நுட்ப கோளாறு' என, பல காரணங்களை கூறி, காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்தும், நாள்தோறும் சராசரியாக, 50 - 60 லட்சம் யூனிட், மின்சாரத்தை வாங்க மறுத்தனர்.அதேசமயம், தனியார் எரிவாயு மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, ஒரு யூனிட் மின்சாரம், சராசரியாக, 14 ரூபாய் என்ற அதிக விலைக்கு வாங்கி வந்தனர்.இந்நிலையில், சில தினங்களாக, காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின் தேவையும் வழக்கத்தை விட, அதாவது, 11 ஆயிரம் மெகாவாட்டிற்கு கீழ் தான் உள்ளது.

மீண்டும் மின்தடை:

ஆனால், புதிய அனல் மின் நிலையங்கள்; தனியாரிடம் அதிக விலை மின்சாரம்; நீர் மின் நிலையங்களில், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகியும், மின் தேவை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், கடந்த இரு தினங்களாக, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்கு மாறாக, மீண்டும் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மூன்று நாட்களாக, அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மின் தேவை குறைந்திருந்தது. அவை, திரும்பவும் செயல்பட துவங்கியுள்ளதால், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, விரைவில் அதற்கேற்ப, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.