இந்தியிலும் ரீமேக்காகிறது 'வேலையில்லா பட்டதாரி'?

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'வேலையில்லா பட்டதாரி' படம் இந்தியில் ரீமேக் செய்ய தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார்.

தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தயாரித்து இருந்தார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிட்டது.

வெளியிட்ட 3 நாளில் 10 கோடிக்கும் அதிகமான வசூல், விமர்சகர்களிடம் வரவேற்பு, மக்களிடமும் வரவேற்பு என படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் யாருக்கும் கொடுக்கவில்லை.

இது குறித்து விசாரித்த போது, "'ராஞ்ஹானா' படத்தின் மூலம் தனுஷிற்கு இந்தியிலும் மார்க்கெட் இருக்கிறது. பால்கி இயக்கத்தில் அமிதாப், அக்‌ஷரா உடன் தற்போது 'ஷமிதாப்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து தனக்கு மிகப்பெரியளவில் மார்க்கெட் கிடைக்கும் என நம்புகிறார் தனுஷ்.

ஆகையால், இந்தி ரீமேக்கில் அவரே நடித்து, வேல்ராஜையே இயக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார். 'ஷமிதாப்' வெளியான உடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்று கூறப்படுகிறது.