தமிழ் சினிமாவின் மிரட்டும் வில்லன்கள் எங்கே?

“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

“சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்.”

இது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே வாள் வீச்சுக்கு முன் நடக்கும் வாய் வீச்சு. எம்.ஜி.ஆர். சினம் கொண்ட வெற்றிச் சிங்கமாக மிளிர நம்பியார் என்னும் மதம் கொண்ட யானை தேவை.

“இந்த நாள்…” என்று ரஜினி தொடை தட்டிச் சவால்விட “கூட்டிக் கழிச்சி பாரு. கணக்கு சரியா வரும்” என்று அமர்த்தலான வில்லத்தனம் காட்டும் ராதா ரவி வேண்டும்.

உலகம் முழுவதிலும் வணிகப் படங்களில் தூக்கிப் பிடிக்கப்படும் நாயக நடிகர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக வில்லன்கள் இருந்திருக்கிறார்கள். திரையில் வரும் கதாபாத்திரங்களை மட்டுமல்ல, மக்களையும் நடுங்கவைத்த வில்லன்கள் அனேகம் பேர் உண்டு. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றபோது அவரிடம் ஒரு மூதாட்டி, “அந்த நம்பியாரு கிட்ட மட்டும் ஜாக்கரதயா இருப்பா” என்று சொன்னதாக ஒரு பேச்சு உண்டு.

ஆனால் இத்தகைய வில்லன்கள் இன்று அருகிவருகிறார்கள். தமிழ் சினிமாவில் நாயக வழிபாடு, எம்.ஜி.ஆர்., சிவாஜியில் தொடங்கி இன்று விஜய், அஜித் என்று வளர்ந்து நிற்கிறது. என்றாலும் வலுவான வில்லன்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். மசாலா படங்கள் பெருகப் பெருக நாயகர்கள் சூப்பர் ஹீரோக்கள் ஆனார்கள். ஆனால் அவர்களை அப்படி ஆக்கிய வில்லன்கள் புறக்கணிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்.

சிரிக்கவைக்கும் வில்லன்கள்

நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் படங்கள் இன்றும் அதிகமாக வந்தாலும் புதிய முயற்சிகளைக் கொண்ட படங்களும் ரசிகர்களுக்குப் பிடிக்கின்றன. வில்லன் தேவைப்படாத படங்கள் இன்று அதிகரித்துவிட்டன. வித்தியாசமான கதை கொண்ட படங்களும் சிரிக்கவைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்ட படங்களும் இவற்றில் அடக்கம். கிச்சு கிச்சு மூட்டுபவர்கள் மட்டுமே போதும் என்று சொல்லும் அளவுக்குச் சிரிக்கவைத்துக் கல்லா கட்டும் படங்கள் அதிகரித்துவருகின்றன.

சண்டைக் காட்சிகள் தேவையில்லை, கொடூரமான வில்லன்கள் தேவையில்லை இரண்டரை மணிநேரத்தைச் சந்தோஷமாகக் கழித்தால் மட்டும் போதும் என்கிறார்கள் ரசிகர்கள். அதை நகைச்சுவை நடிகர்களைவிட மிக நன்றாகவே செய்கிறார்கள் இப்போதைய படங்களில் வரும் வில்லன்கள் என்பதுதான் நகைமுரண்.

நகைச்சுவைக்காகவே எடுக்கப்படும் படங்களில் மட்டும்தான் இப்படி என்றில்லை. சீரியஸாக மிரட்ட நினைக்கும் படங்களிலும் வில்லன்கள் தம்மை அறியாமலேயே சிரிப்பு மூட்டுகிறார்கள். “வேதநாயகம்னா பயம்” என்று வேட்டைக்காரனில் மிரட்டும் வில்லனைப் பார்த்துச் சிரிக்காதவர்கள் குறைவு.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வில்லனைப் பார்த்து நாயகனே அமுல் பேபி என்று பரிகாசம் செய்யும்போதும் அதே விளைவுதான். அளவுக்கு அதிகமாகக் கொடூர முகம் கொள்ளும் வில்லன்களும் சிரிக்கவைக்கவே பயன்படுகிறார்கள். சிறுத்தை, வில்லு ஆகிய படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.

சூது கவ்வும் படத்தில் வரும் அதிபயங்கர என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது பின்புறத்தில் சுட்டுக்கொண்டு துடிக்கும்போதும், சுந்தர். சியின் கலகலப்பு படத்தில் வரும் வில்லன் நாய்க்கடி வாங்கும்போதும், நேரம் படத்தின் வில்லன் ஆட்டோவில் படாத இடத்தில் பட்டுச் சாகும்போதும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ரசிகர்கள். நாயக பிம்பங்களை உடைக்கும் படங்களை எடுக்கத் தயாராகாத தமிழ் சினிமா வில்லன்களின் பிம்பத்தை உடைப்பதில் உற்சாகமாக இறங்கியிருக்கிறது.

சில படங்களில் சூழ்நிலையே வில்லனாகிவிடுகிறது. ராஜா ராணி, மூடர் கூடம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, குக்கூ, போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இவற்றில் நாயகர்களுக்கு ஏற்படும் நெருக்கடிக்கு எந்தத் தனி நபரும் காரணமல்ல. திருமணம் என்னும் நிக்காஹ் என்னும் படத்திலும் இதே கதைதான். செயற்கையான வில்லன்களுக்குப் பதில் சூழலைக் கொண்டுவருவதன் மூலம் தமிழ் சினிமா யதார்த்தத்துக்கு நெருக்கமாக வருகிறது என்று சொல்லலாமா?

போட்டி, பயம், வெற்றி, தோல்வி, அவமானம் பரிகாசம் ஆகியவற்றுக்கு எல்லோரும் உள்ளாகிறோம். ஒரே ஒரு எதிரியை ஆயுள் முழுக்க யாரும் எதிர்கொள்வதில்லை. இதுவே வாழ்வின் யதார்த்தம். எனவே, ஒற்றை வில்லன் இல்லாத திரைப்படங்கள் ஒரு வகையில் நம் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க முயல்கின்றன எனச் சொல்லலாமா?

யதார்த்தமான வில்லன்கள் சாத்தியமா?

அழுத்தமான வில்லன்கள் இனிச் சாத்தியம் இல்லையா? ஆடுகளம் திரைப்படத்தின் மிக அழுத்தமான ஆளுமை கம்பீரமாகத் தோன்றி எதிர்மறைத் தன்மை கொண்டதாக மாறும் பேட்டைக்காரன் கதாபாத்திரம்தான். மனதில் இருக்கும் வன்மத்தை மறைத்துக்கொண்டு சிரிக்கும் பேட்டைக்காரனைப் போன்ற மனிதர்கள் நம் வாழ்விலும் இருக்கலாம்.

எனவே அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் என்பது யதார்த்த வாழ்வுக்கு அப்பாற்பட்டதல்ல. இதே பாத்திரத்தைச் செயற்கையாகப் பூதாகரப்படுத்தி ரசிகர்களை மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் புரிதலோடு வில்லன் பாத்திரத்தை அணுகினால் யதார்த்தமான அதே சமயம் அழுத்தமான வில்லன்களைத் திரையில் கொண்டுவர முடியும்.

அதே சமயம், யதார்த்தமான வாழ்க்கையோட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு திரைக்கதைக்கு எளிய மனிதர்களே ஹீரோவுக்குரிய குணங்களோடும், வில்லனுக்குரிய வன்மத்தோடும் எழுந்து வரலாம். ஒரே மனிதரிடம் நற்குணங்களும் தீய குணங்களும் கலந்து இருக்க முடியும்.

இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் படங்கள் அதிகம் வந்ததில்லை. கொடூர வில்லன்களை ஒழித்துக்கட்டிவிட்ட தமிழ் சினிமா தட்டையான நாயகர்களுக்கும் விடைகொடுத்து அனுப்ப வேண்டும். நாயகத்துவமும் வில்லத்தனமும் கலந்த யதார்த்தமான மனிதர்களைச் சித்திரிக்கும் காலம் வருமா? அப்படியே வந்தாலும் அசட்டு நகைச்சுவைக்காக மட்டுமே இந்தக் கலவையைப் பயன்படுத்தாமல் இருக்குமா?