கோடீஸ்வரிகளாகும் தமிழ் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி, கமல் தவிர மற்ற நடிகர்கள் ஒரு கோடி சம்பளம் வாங்கினால் அதுவே பெரிய செய்தி. இன்றைக்கு முதல் படத்தில் பணம் கொடுத்து அறிமுகமாகும் நடிகர் அந்த படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த படத்துக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார். கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்கினாலும் வெளியில் அத்தனை கோடி சம்பளம், இத்தனை கோடி சம்பளம் என்று சொல்லி இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


நடிகர்கள் கோடியை தாண்டினாலும் நடிகைகள் சம்பளம் லட்சங்களுக்குள்ளேயேதான் புரண்டு கொண்டிருந்தது. இந்தி நடிகைகள்தான் கோடி கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். காரணம் இந்தி பேசும் 8 மாநிலங்கள் அந்த படங்களின் வியாபார பரப்பு என்பதால் அந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயங்குவதில்லை.


நயன்தாரா


தென்னிந்திய நடிகைகளும் இப்போது கோடிக் கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். என்னதான் புலம்பினாலும் தயாரிப்பாளர்களும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த கோடி புண்ணியத்தை முதலில் துவக்கி வைத்தவர் நயன்தாரா. பிகினி அழகுடன் தோன்ற பில்லா ரீமேக்கில் ஒரு கோடி சம்பளம் நிர்ணயித்தார் நயன்தாரா. அன்று முதல் அவர் சம்பளம் கோடிகளில்தான். இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஒண்ணே கால் கோடியை அள்ளிக் கொடுத்து உயர்த்தி வைத்தார். இது நம்ம ஆளு படத்தில் மாஜி காதலுடன் நடிப்பதை தட்டி கழிப்பதற்காக சும்மானாச்சும் இரண்டு கோடி கேட்க அதை தர தயார் என்று தாடி டாடி அறிவிக்க... சம்பளம் இரண்டு கோடியானது.


ஆஹா... இது ரொம்ப நல்லா இருக்கே என்று அப்படியே காதல் சமாச்சாரங்களை தூக்கிப்போட்டுவிட்டு கோடிகளை நோக்கி நகர ஆரம்பித்தார். தன் வினை தன்னை சுடும் என்பதை போல நயனின் சம்பளத்தை ஏற்றிவிட்ட உதயநிதியின் நண்பேண்டா படத்துக்கு சுளையாக 2 கோடியே 30 லட்சம் சம்பளம். தென்னிந்திய நடிகைகளில் இவரே சம்பளத்தில் நம்பர் ஒண்.


சமந்தா


மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி படங்களில் நடித்து யாரென்றே தெரியாமல் இருந்த சமந்தாவை தெலுங்கு விண்ணை தாண்டி வருவாயா விண் முட்டும் அளவுக்கு உயர்த்தியது. அடுத்த படமே எஸ்.எஸ்.ராஜமவுலியின் நான் ஈ. சமந்தா சமர்த்தாக காய் நகர்த்தியதில் இன்றைக்கு தெலுங்கு, தமிழில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். கூட நடிப்பது யார், என்ன கதை, என்ன படம், படம் ரிலீசாகுமா ஆகாதா? அதைபற்றியெல்லாம் கவலையே கிடையாது. சுளையா ஒரு கோடியை எடுத்து வையுங்க. 30 நாள் கால்ஷீட்டை கையில புடிங்க என்பதுதான் சமந்தா பாலிசி.


அனுஷ்கா


அனுஷ்கா பொம்பள விக்ரம். ஒரு படத்துக்கு ரொம்ப மெனக்கெடுவார். கடுமையாக உழைப்பார். அதனால் இவரது சம்பளத்தை ஒரு கணக்கிற்குள் வைக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்துக்கு ஒண்ணறை கோடி சம்பளம் என்கிறார்கள். ராஜமவுலியின் பாகுபாலிக்கு 5 கோடி என்றும், ராணிருத்ரமாதேவிக்கு 3 கோடி என்றும் சொல்கிறார்கள். லிங்காவுக்கு 20 நாள் கால்ஷீட் பாகுபாலிக்கு 120 நாள் கால்ஷீட், ருத்ரமாதேவிக்கு 90 நாள் கால்ஷீட் அதனால்தான் இந்த வித்தியாசம். இவரும் சுந்தர்.சி. இயக்கிய ரெண்டு என்ற படத்தில் நடித்து ஆள் சுமார்தான் என்று தெலுங்கு பக்கம் விரட்டி அடிக்கப்பட்டவர்.


ஹன்சிகா


சின்ன குஷ்புவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். இன்று குஷ்புவே அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இடத்தில் இருக்கிறார். தெலுங்கில் 2 கோடி வரை தமிழில் ஒண்ணறை கோடி வரை இதுதான் ஹன்சிகாவின் இன்றைய சம்பளம். சுந்தர் சி அடுத்து இயக்கும், ஆம்பள படத்திற்கு சம்பளம் பெறாமல் அந்த சம்பளத்தை மூலதனமாக போட்டு இணை தயாரிப்பாளராயிருப்பதாக சொல்கிறார்கள். டாக்டர் தாய்குலம் அருகிலேயே இருப்பதால் நோ மேனேஜர், நோ புரோக்கர்ஸ், நோ கமிஷன் எல்லாமே நேரடி டீலிங்தான். சம்பளத்தில் 10 சதவிகிதத்தை அநாதை குழந்தைகளுக்கு செலவிடும் அழகு தேவதை ஹன்சிகா.


ஸ்ருதி ஹாசன்


நம்ம உலக நாயகனின் வாரிசு ஸ்ருதி ஹாசன், கோடி கிளப்பில் சேர்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஏழாம் அறிவு படத்தில் 50 லட்சமும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் 40 லட்சமும் வாங்கிக் கொண்டு நடித்த ஸ்ருதி அப்படியே பாலிவுட்டுக்கு சென்று, டோலிவுட்டில் கவர்ச்சி காட்டி மீண்டும் கோலிவுட்டு வந்து பூஜை போட்டுவிட்டார். பூஜைக்கு அவர் வாங்கியுள்ள சம்பளம் ஒரு கோடியே பத்து லட்சம் என்கிறார்கள்.


இந்த பஞ்சபாண்டபிகள்தான் இப்போதைக்கு கோடீஸ்வரிகள் கிளப்பில் சேர்ந்திருப்பவர்கள்.


லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா


தற்போது 60 லட்சத்தை தொட்டிருக்கும் லட்சுமி மேனன், 50 லட்சத்தை நெருங்கி இருக்கும் ஸ்ரீதிவ்யா, ப்ரியா ஆனந்த், ஆகியோர் விரைவில் கோடி கிளப்பில் சேரலாம். அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இந்த மூவரும் படத்தில் எப்படி நடிக்கிறார்களோ அது வேறு, ஆனால் படம் ஹிட்டாகி விடுகிறது. அதிர்ஷ்டகாற்று அல்ல புயலே இவர்கள் பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது.


த்ரிஷா, ஆண்ட்ரியா


பத்து ஆண்டுகள் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா கடைசி வரை கோடியை தொட முடியவில்லை. நடிகைகளின் சம்பளம் கோடியை தொட்டபோது த்ரிஷாவின் வயது 30ஐ தொட்டுவிட்டது. அதனால் தற்போது சீனியர் நடிகர்களின் ஜோடியாகிவிட்டார். 70 லட்சத்திலிருந்து 85 லட்சம் வரை சம்பளம். இதே நிலைதான் ஆண்ட்ரியாவுக்கு. அவருக்கும் 30 வயது நெருங்கிவிட்டதால் என்னதான் நடித்தாலும், நடித்த படம் ஹிட்டானாலும் சம்பளம் 30 லட்சத்தை தாண்டவில்லை. ஆட்டம், பாட்டு, ஹீரோயின் என பேக்கேஜாக சான்ஸ் கொடுத்தால் 50 லட்சம் வாங்குவார்.


எப்படிப் பார்த்தாலும் இப்போது ஹீரோயின்கள் காட்டில் பண மழைதான். இன்று கோடி வாங்குகிறவர்கள் நாளை லட்சத்துக்கு வரலாம். லட்சம் வாங்குகிறவர்கள் கோடிக்கு செல்லலாம். ஏன்னா வாழ்க்கை மட்டுமில்லீங்கண்ணா... சினிமாவும் ஒரு வட்டம் தானுங்கண்ணா...!!