பிரதமர் பதவியை உயிருக்கு பயந்து ஏற்கவில்லையா?

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய நட்வர் சிங், ஐமு கூட்டணி அரசு -1ன் போது கேபினட் அமைச்சராக இருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து 2005ல் பதவி விலகினார். பின்னர், 2008ல் கட்சியில் இருந்தே விலகினார். அவர் சுயசரிதை எழுதியுள்ளார். இந்த புத்தகம் பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நட்வர்சிங், கடந்த 2004ல் தனது உள்மனது சொன்னதால் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என்று சோனியா கூறியது உண்மையல்ல. 

தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜிவ் காந்தியை போல் பிரதமர் பதவியை ஏற்றால் சோனியா காந்தியும் கொல்லப்படுவார் என்று ராகுல் காந்தி பயந்தார். அதனால், பிரதமர் பதவியை ஏற்கக் கூடாது என சோனியாவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாகவே, பிரதமர் பதவியை சோனியா ஏற்கவில்லை என்று கூறினார். நட்வர் சிங்கின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு சோனியா நேற்று அளித்த பேட்டியில், இதுபோன்ற பல தாக்குதல்களை பார்த்து விட்டேன். இதனால் நான் புண்பட மாட்டேன். எனது மாமியார் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதையும், எனது கணவரின் மரணத்தையும் பார்த்திருக்கிறேன். உயிருக்கு பயந்து பிரதமர் பதவியை நான் ஏற்கவில்லையா? எனவே, இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவதற்கு அப்பாற்பட்ட தூரத்தில் இருக்கிறேன்.

 அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால், இதுபோன்ற செயல்களை தொடரட்டும். ஆனால், இந்த பிரச்னையை நான் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளேன். நானும் புத்தகம் எழுதுவேன். அப்போது எல்லாருக்கும் உண்மைகள் தெரிய வரும் என்றார். வழக்கமாக சோனியா அமைதியாகவே இருப்பார். ஆனால், இந்த பேட்டியின்போது அவர் மிகவும் ஆவேசப்பட்டார்.

2004ல் நடந்தது என்ன?

நட்வர்சிங் எழுதியுள்ள ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப் என்ற சுயசரிதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது முக்கிய தகவல் இதுதான். “2004ம் ஆண்டு மே 18ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மன்மோகன் சிங், சோனியா காந்தியின் குடும்ப நண்பர் சுமன் துபே, பிரியங்கா ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். இந்த ஆலோசனையில், சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்பதற்கு ராகுல் காந்திக்கு விரும்பம் இல்லை என்ற தகவலை பிரியங்கா தெரிவித்தார். 

முன்னாள் துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவை பிரதமராக்க சோனியா காந்தி விருப்பம் தெரிவித்தார். ஆனால், உடல் நலனைக் காரணம்காட்டி பிரதமர் பதவியை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதையடுத்து, மன்மோகன் சிங்கை பிரதமராக பதவி ஏற்கச் செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
எனது சுயசரிதை புத்தகத்தில் இந்தத் தகவல் இடம்பெறுவதை தடுத்து நிறுத்தும் முயற்சியாக கடந்த மே 7ம் தேதி என்னை சோனியா காந்தியும் பிரியங்காவும் சந்தித்தனர். 

அப்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் எவ்வாறு பலிகடா ஆக்கப்பட்டேன் என்பது குறித்து அவர்களிடம் விளக்கினேன். அதைத் கேட்டதும், இந்த விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்று சோனியா காந்தி பதிலளித்தார். எனினும், சோனியா காந்தி குறித்த தகவல்கள் எனது புத்தகத்தில் இடம்பெறும் என்பதை அவர்களிடம் கூறிவிட்டேன் என்றும் நட்வர்சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், நட்வர்சிங் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. தனது புத்தகத்துக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று தெரிவித்துள்ளார் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோனியா என்னை இரக்கமின்றி நடத்தினார்

தனியார் தொலைக்காட்சிக்கு நட்வர் சிங் நேற்று அளித்த பேட்டி: கடந்த 1987ம் ஆண்டு தனது அமைச்சரவையுடனும், உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தாமல், இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பும் முடிவை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தன்னிச்சையாகவே எடுத்தார். இலங்கை விவகாரத்தில் அவர் எடுத்த இந்த கொள்கை, அவருடைய படுகொலையில் முடிந்தது. அமைதிப்படை அனுப்பும் முடிவுக்காக அவர் ஒருவரை மட்டுமே குறை கூற முடியாது. அரசில் அங்கம் வகித்த ஒவ்வொருவரும் அதற்கு பொறுப்பு ஆவார்கள். ராஜிவ் காந்தி எல்லாரையும் சுலபமாக நம்பக் கூடியவர்.
சோனியாவை விட ராஜிவ் மீதுதான் எனக்கு பற்று அதிகம். ஏனெனில், சோனியாவை போல் அவர் என்னிடம் கடுமையாக, இரக்கமற்ற முறையில் கொடூரமாக நடந்து கொண்டது கிடையாது. 

சோனியாவை போல் இரக்கமற்ற முறையில் எந்தவொரு இந்தியனும் என்னை நடத்தி இருக்க முடியாது. அதற்கு காரணம், சோனியாவின் ஒரு பக்கம் இந்தியாவை சேர்ந்தது கிடையாது (சோனியா இத்தாலியை சேர்ந்தவர் என்பதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் நட்வர் இவ்வாறு கூறினார்). ஒரு குடும்பத்துக்கு 45 ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசியாக இருந்தவரை, அவருக்கு (சோனியா) நெருக்கமாக இருந்தவரை எந்தவொரு இந்தியனும் கேவலமாக நடத்தி இருக்க மாட்டான். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உட்பட யாரும் இப்படி நடந்திருக்க முடியாது. இவ்வாறு நட்வர் சிங் கூறினார்.

புத்தகம் விற்பதற்காக இப்படி கூறுகிறார்கள்

ஐமு கூட்டணி ஆட்சியின்போது சோனியா காந்தி அதிகாரம் படைத்தவராக இருந்தார் என்றும், அரசு கோப்புகள் அனைத்தும் அவருடைய பார்வைக்கு சென்று வந்தன என்றும் தனது பேட்டியில் நட்வர் சிங் கூறியிருந்தார். இது பற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டபோது, தனது புத்தகத்தை விற்கும் விளம்பரத்துக்காக இதுபோன்ற கருத்துகளை நட்வர் சிங் கூறியுள்ளார். சோனியாவுக்கு அரசு கோப்புகள் எதுவும் அனுப்பப்படவில்லை என்று பதிலளித்தார். மன்மோகன் பிரதமராக இருந்தபோது அவருடைய ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாருவும் சுயசரிதை எழுதினார். அவரும் சோனியா மீது இதேபோன்ற குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதற்கும் நேற்று பதிலளித்த மன்மோகன், சஞ்சய் பாருவும் தனது புத்தகத்தை விற்பதற்காக இதுபோன்ற கருத்தை கூறினார் என்றார்.