நீண்ட நேரம் செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி குளத்தில் குதித்து தற்கொலை

புத்தூர் அருகே உறவினரிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கல்லூரி மாணவி மாயம் 

தட்சிணகன்னட மாவட்டம் புத்தூர் தாலுகா ஆரியாப்பு கிராமம் கரிமுகரு பகுதியை சேர்ந்தவர் மோனப்ப ஷெட்டி. இவரது மகள் சர்மிளா (வயது 17). இவர் புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 31–ந்தேதி சர்மிளா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் சர்மிளாவை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.

குளத்தில் பிணம் மீட்பு 

இதையடுத்து சம்பவம் பற்றி சர்மிளாவின் பெற்றோர், சம்பியா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சர்மிளாவை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாயமான சர்மிளாவின் உடல், அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு குளத்தில் மிதந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பியா போலீசார் விரைந்து சென்று, சர்மிளாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சர்மிளாவின் உடலை போலீசார், மங்களூர் அருகே தேரளகட்டேயில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர்.

தாய் திட்டியதால் பரிதாப முடிவு 

விசாரணையில், சர்மிளா, தனது உறவினரான லாரி டிரைவர் ஒருவரிடம் தினமும் இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30–ந்தேதியும், சர்மிளா, லாரி டிரைவரிடம் நீண்ட நேரமாக செல்போனில் பேசிய படி இருந்துள்ளார். இதை கவனித்த சர்மிளாவின் தாய், அவரை திட்டியதுடன் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா 31–ந்தேதி வீட்டின் அருகே இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சம்பியா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.