இந்திய கிரிக்கெட் அணியின் எதிர் காலம் என்ன?

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி கண்ட பிறகு ஐ.பி.எல். போட்டிகளால் இந்தியாவின் ஆட்டம் பாதிக்கப்படுகிறதா என ஒரு செய்தியாளர் கேள்வியெழுப்பியபோது, அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி அதற்குக் கோபமாகப் பதிலளித்தார். ஐ.பி.எல். மீது பழி போடாதீர்கள் என்றார்.

முப்பது ஓவர்களில் ஆட்டமிழக்கும் ஒரு அணி, 150-200 ரன்களுக்குள் தொடர்ந்து ஆட்டமிழக்கும் ஒரு அணி, எதன் மீதும் பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதில் ஐயம் இல்லை. ஆனால் ஐ.பி.எல்.லுக்கும் இந்திய அணியின் டெஸ்ட் ஆட்டத்துக்கும் தொடர்பே இல்லை எனச் சொல்லிவிட முடியாது. ஐ.பி.எல். முடிந்த பிறகு வரும் தொடரில் இந்தியா பெரும்பாலும் சொதப்புகிறது.

தட்டையான ஆடுகளங்களில் ஆடப்படும் ஐ.பி.எல். போட்டிகளில் சில அணிகள் 20 ஓவர்களில் 200 ரன்களைக்கூடக் குவித்துவிடுகின்றன. இன்னும் ஐந்து ஓவர்களில் 100 ரன் என்றாலும் அதையும் அடித்துக் காட்டும் அசகாய அதிரடி சூரர்கள் இருக்கிறார்கள். ஐ.பி.எல். போட்டிகளில் வீச்சாளர்களின் பேச்சைப் பந்து கேட்காது.

பெரும்பாலான தடுப்பு ஆட்டக்காரர்கள் கண்ணுக்கு எட்டாத தொலைவில் பவுண்டரிகளைத் தடுப்பதற்காக நிற்பார்கள். புஜ பலமும் வேகமும் கற்பனை வளமும் கொண்ட மட்டையாளர்கள் பந்துகளை விதவிதமாய்ப் பறக்க விட்டு வாண வேடிக்கை நடத்துவார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் டெஸ்ட் போட்டிகளில் அல்ல, சற்றே நிதானம் தேவைப்படும் ஒரு நாள ்போட்டிகளில்கூடப் பிரகாசிப்பதில்லை. வீரேந்திர சேவாக், ஜாக் காலிஸ், விராட் கோலி, ஷேன் வாட்சன் போன்ற சிலர் மட்டுமே மூன்று விதமான ஆட்டங்களிலும் பிரகாசிக்கிறார்கள் (கோலியின் அண்மைத் தொடரை மறந்துவிடுவோமாக).

ஐ.பி.எல்.லின் தாக்கம்

இத்தகைய போட்டிகளில் வெறிபிடித்ததுபோல் ஆடும் ஆட்டக்காரர்கள் உடனே டெஸ்ட் ஆடச் சொன்னால் திணறுகிறார்கள். மட்டையைப் பிடிக்கும் விதம், கால்களை வைத்துக்கொள்ளும் விதம் ஆகிய யாவும் வெறியாட்டத்துக்கு ஏற்ற விதத்தில் மாறிவிடுகின்றன. இதிலிருந்து விடுபடச் சிலர் சிரமப்படுகிறார்கள். அவசரமான அசைவுகள் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. ஸ்லிப் தடுப்பாளர்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாததுபோல ஆடுகிறார்கள்.

ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்திலும் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்திலும் இந்த தாக்கத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. வழக்கமாக டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்துகொள்ளும் கோலியும் இந்த முறை கைகளைப் பயன்படுத்தும் முறையில் தவறு செய்தார். சரியான அளவிற்குக் கூடுதலான அளவில் ஆஃப் ஸ்டெம்ப் வரிசையில் வீசப்படும் பந்துகளை நேர்த்தியாகக் கால்களை நகர்த்தி, உடலை நன்கு வளைத்து, மேல் கையைச் சரியான விதத்தில் பயன்படுத்தி கவர் அல்லது எக்ஸ்ட்ரா கவர் ட்ரைவ் அடிக்கும் திறமை கொண்ட கோலி இந்த முறைகால்களை நகர்த்தவே யோசித்தார்.

பெரும்பாலான சமயங்களில் கிரீஸுக்குள் நின்றபடியே பந்தைத் தொட்டும் தொடாமலும் ஆட்டமிழந்தார். ஐ.பி.எல். மனநிலையிலிருந்து டெஸ்ட் மனநிலைக்கு மாறுவதில் இருந்த ஊசலாட்டமாகவே இதைப் பார்க்க முடியும்.

டெஸ்ட் போட்டிக்கான தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் சதீஸ்வர் புஜாராவிடமும் இந்த ஊசலாட்டம் தெரிந்தது. அவரும் காலை நகர்த்தாமல் மேல் கையை அதிகம் பயன்படுத்தாமல் ஆடினார். கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்கு வெறிபிடித்த மட்டையாட்டத்தை வரித்துக்கொள்ளும் இந்திய அணியினர் டெஸ்ட் போட்டிக்கேற்ப உடனடியாக மாற்றிக்கொள்ளக் கஷ்டப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

இதைப் பற்றிக் கேட்டால் தோனிக்குக் கோபம் வருகிறது. ஐ.பி.எல். ஆட்டங்களால் ஜாகீர்கான், சேவாக் போன்றவர்களுக்குக் காயம் ஏற்பட்டு, அடுத்த தொடர்களில் ஆட முடியாமல் போயிருக்கிறது. பிற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐ.பி.எல்.லில் ஆடினாலும் அவர்களின் எண்ணிக்கை குறைவு. இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லாருமே ஆடுகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானத்தையும் ஆட்டக்காரர்களின் வருமானத்தையும் கூட்ட உதவும் இந்தப் போட்டித் தொடரில் நடக்கும் மோசடிகள் குறித்த புகார்களையும் அலட்சியப்படுத்திவிட முடியாது. இந்நிலையில் வருமானத்துக்காக மட்டுமே நடத்தப்படும் இந்தக் கேளிக்கையை இனியும் தொடர வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆட்டங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பது பற்றியாவது யோசிக்கலாம்.

தோனி வாரியத்திற்குக் கட்டுப்பட்டவர் என்பதால் ஐ.பி.எல். பற்றி அவரால் விமர்சிக்க முடியாது. ஆனால் வாரியத்தின் பொதுத் தொடர்பு அதிகாரிக்கு வருவதைப் போன்ற கோபம் அவருக்கு வர வேண்டியதில்லை.

ஆண்டர்சன் விவகாரம்வேறு சில விஷயங்களிலும் தோனியின் போக்கு கேள்விக்குரியதாக உள்ளது. ஜடேஜா – ஆண்டர்சன் விவகாரத்தில் ஆண்டர்சன் மீது இந்திய அணி அளித்த குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி ஐ.சி.சி. விசாரணைக் குழு சொல்லிவிட்டது. தீர்ப்பு குறித்து தோனி கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

ஆண்டர்சன் விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டதாகக் கருத இந்தியர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அணித் தலைவர் இந்த அளவு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் இல்லை. தீர்ப்பு வந்த அன்று இந்திய அணியினரின் முகங்களில் வருத்தமும் கோபமும் தெரிந்தன என இந்தியாவிலிருந்து சென்ற செய்தியாளர் ஒருவர் எழுதியுள்ளார். ஆனால் தோல்வியடைந்த சமயத்தில் இதில் பாதிக்கூட வருத்தம் தெரியவில்லை என்றும் அவர் எழுதியிருக்கிறார்.

இதற்குக் கோபப்படும் தோனிக்கு ஐ.பி.எல். முறைகேடுகள் குறித்துச் சொல்ல ஒரு வார்த்தைகூட வரவில்லை. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலதிகாரி விஷயத்தில் இந்திய வாரியம் நடந்துகொள்ளும் விதம் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கக்கூட வழி இல்லை.

கவலை தரும் கீப்பிங்மைதானத்துக்கு உள்ளேயும் தோனியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இந்தப் படுதோல்விக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை. தோனி முன்னணி மட்டையாளர்கள் சிலரைவிட நன்றாகவே ஆடினார். ஆனால் விக்கெட் கீப்பிங்கில் அவரது செயல்பாடுகள் கவலைக்குரிய விதத்தில் உள்ளன. அவருக்கும் முதல் ஸ்லிப்புக்கும் இடையில் செல்லும் கேட்சுகளைப் பிடிக்க அவர் மெனக்கெடுவதில்லை. தோனி டைவ் அடிப்பது அபூர்வம்.

கையில் வரும் கேட்சை விட்டால்தான் வாய்ப்பு தவறவிடப்பட்டது என்பதில்லை. கில் கிறிஸ்ட் போன்றவர்கள் அரைவாய்ப்புகளையும், சில சமயம் வாய்ப்பே இல்லாத வாய்ப்புகளையும் அவுட் ஆக மாற்றுவார்கள். ஸ்டெம்புக்குப் பின்னால் தோனியின் வேகமின்மை, இதுபோன்ற வாய்ப்புகளைப் பற்றி இந்தியப் பந்துவீச்சாளர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதபடி செய்துவிடுகிறது.

மட்டையாளர் பாயிண்ட் திசையில் அடித்துவிட்டு ஓடினால் தடுப்பாளர் எடுத்து வீசும் பந்தைப் பிடிக்க கீப்பர் உடனே ஸ்டெம்புக்கு அருகில் வருவார். இப்போதெல்லாம் தோனி அப்படி ஓடுவதில்லை. அருகில் இருக்கும் வேறு யாராவது ஓடுகிறார்கள். தோனி கீப்பிங்கை முழு ஈடுபாட்டுடனும் உடல் திறனுடனும் செய்வதாகத் தெரியவில்லை.

ஸ்லிப்பில் அனுபவமும் திறமையும் அற்ற தடுப்பாளர்கள் இருக்கும்போது இந்தப் பிரச்சினை இன்னமும் கூடிவிடுகிறது. இந்நிலையில் பந்து வீச்சாளர்களின் ஊக்கம் குன்றத்தான் செய்யும்.

2011 – 2014: எது மோசமான தோல்வி?

தொடர் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தோனி இதுதான் இந்தியாவின் மோசமான தோல்வி என்று சொல்ல முடியாது, 2011-ல் பெற்ற தோல்வியும் இதே அளவு மோசமானதுதான் என்றார். கடந்த முறை இங்கிலாந்து சென்ற இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தோற்றது. ஆனால் அந்த அணி ஆடிய விதத்தில் அடிப்படையான பிரச்சினை எதுவும் இல்லை.

மோசமாகத் தோற்றபோதும் ஒரே ஒரு முறை மட்டுமே அணி 200 ரன்னுக்குக் கீழே ஆட்டமிழந்தது. ராகுல் திராவிட் மூன்று சதங்கள் அடித்தார். சச்சின், லட்சுமணன் ஆகியோரின் ஆட்டத் திறன் உச்சத்தில் இல்லை என்றாலும் ஆளுக்கு இரண்டு அரை சதங்களை அடித்தார்கள். அன்றைய இங்கிலாந்து அணி இன்றைய அணியை விடவும் வலுவான அணி. எனவே அதுவும் மோசமான தோல்விதான் என்று தோனி சொல்வது தோல்விக்கான சப்பைக்கட்டாகத்தான் தெரிகிறது. இப்படிச் சொல்வதன் மூலம் தோனி என்ன சொல்லவருகிறார்?

அணித் தலைவர் தன் அணியினரை ஊக்கப்படுத்த வேண்டியவர் என்பதால் வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால் ஒவ்வொரு ஆட்டக்காரரும் தன் உச்சபட்சத் திறமையை வெளிப்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. புஜாரா, கோலி, தவன் போன்ற திறமைசாலிகள் தமது திறனில் சிறிய அளவைக்கூட வெளிப்படுத்தவில்லை.

தொடர்ந்து இப்படி நடக்கும்போது இதில் அணித் தலைவருக்குப் பங்கு இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒவ்வொருவரையும் உச்சபட்ச திறமையைக் காட்டவைப்பதில் தோனியின் அணுகுமுறை என்ன? அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன?

இந்தக் கேள்விகளுக்குப் பதில்தர வேண்டிய பொறுப்பும் தோனிக்கு இருக்கிறது. கோபப்படாமல் யோசித்துப் பதில் தரலாம். சொல்லில் இல்லாவிட்டாலும் செயலில் பதில் தரலாம். கிரிக்கெட்டின் மீது தீராக் காதல் கொண்ட இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் என்ன? தொடரும்...