ஆஸி. அதிர்ச்சி தோல்வி 31 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது

முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று அதிர்ச்சி அளித்தது ஜிம்பாப்வே. ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. நான்காவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் நேற்று மோதின. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

 காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்த போட்டியில் களமிறங்கினார். ஜிம்பாப்வே வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பிஞ்ச் 11, ஹியூஸ் 10, பெய்லி 1, மேக்ஸ்வெல் 13, மார்ஷ் 15 ரன்னில் வெளியேற, ஆஸ்திரேலியா 28.5 ஓவரில் 97 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கேப்டன் கிளார்க் - ஹாடின் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. 

பொறுப்புடன் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்த கிளார்க், 68 ரன் எடுத்து (102 பந்து, 2 பவுண்டரி) காயம் காரணமாக வெளியேறினார் (ரிட்டயர்டு ஹர்ட்). பென் கட்டிங் 26, ஹாடின் 49 ரன் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர். ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்தது. லியான் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜிம்பாப்வே பந்துவீச்சில் உத்செயா, திரிபானோ, சீன் வில்லியம்ஸ் தலா 2, நுயும்பு, வாலர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. மவோயோ 15, சிக்கந்தர் 22, மசகட்சா 18 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டிய பிரெண்டன் டெய்லர் 32 ரன் எடுத்து (26 பந்து, 5 பவுண்டரி) லியான் சுழலில் பலியானார். வாலர் 11, வில்லியம்ஸ் 4, திரிபானோ 3 ரன்னில் ஆட்டமிழக்க, 

 ஜிம்பாப்வே 38.2 ஓவரில் 156 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. ஆஸி. அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் சிகும்புரா - உத்செயா ஜோடி உறுதியுடன் போராடியது. அபாரமாக விளையாடிய சிகும்புரா அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்து ஆஸி. அணிக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தது. ஜிம்பாப்வே அணி 48 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்த, அந்நாட்டு ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர். 

1983 உலக கோப்பை தொடரில் ஆஸி. அணியை வீழ்த்தியிருந்த ஜிம்பாப்வே, 11,406 நாட்களுக்குப் பிறகும் மீண்டும் அந்த அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. சிகும்புரா 52 ரன் (68 பந்து, 4 பவுண்டரி), உத்செயா 30 ரன்னுடன் (28 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் லியான் 4, ஸ்டார்க் 2, மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். சிகும்புரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 ஆட்டங்களின் முடிவில் தென் ஆப்ரிக்கா 9, ஆஸ்திரேலியா 5, ஜிம்பாப்வே 4 புள்ளிகள் பெற்றுள்ளன. நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.