ரியல் எஸ்டேட்: நிலைபெறும் சென்னை

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே ரியல் எஸ்டேட் தொழில் நிலையாக உள்ள நகரம் சென்னைதான் எனச் சமீபத்தில் வெளியான நைட் ஃப்ராங் (Knight Frank) ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் மிக மோசமாக இருந்த 2008-2009 காலகட்டத்தில் கூட மற்ற இந்திய மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் ரியல் எஸ்டேட் சந்தை ஓரளவு சீராகவே இருந்தது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதுபோல, 2011-ம் ஆண்டிலிருந்து 2014 வரைக்குமான வீடு விற்பனையை ஒப்பிட்டுப் பார்த்தால். 2011-ல் மெதுவாக உயரத் தொடங்கிய வீடு விற்பனை 2012 இரண்டாம் அரையாண்டில் உச்சத்தில் இருந்தது.

பிறகு நாடு முழுவதும் நிலவிய ரியல் எஸ்டேட் சரிவால் குறைந்து கிட்டத்தட்ட 2011-ம் ஆண்டில் இருந்த அளவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதுபோல வீடு விலை விற்பனை சட்டென வீழ்ச்சியடையவில்லை. சீராகக் குறைந்துள்ளது. அதுபோல புதிய வீட்டுத் திட்டங்களும் 2011-லிருந்து சீராக உயர்ந்து, 2012 முதலாம் அரையாண்டில் உச்சத்தில் இருந்தது. ஆனால் புதிய திட்டங்கள் சீராகக் குறையவில்லை என்றாலும் மிக மோசமான நிலைக்கு வீழ்ச்சியடையவில்லை.

வீடு விற்பனையும், புதிய திட்டங்களும் இந்த 2014 முதலாம் அரையாண்டில் 31சதவீதம் அதிகரித்துள்ளது. இது அடுத்த அரையாண்டில் 14 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ரியல் எஸ்டேட்

சென்னை ரியல் எஸ்டேட்டை அந்த அறிக்கை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கிறது. நுங்கம்பாக்கம், போட்கிளப், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், திநகர், மைலாப்பூர், ஆர்.ஏ.புரம், அடையார் ஆகிய மத்திய சென்னைப் பகுதிகள் (நாடாளுமன்றத் தொகுதி நிலவரத்திலிருந்து வேறுபட்டது இது) சென்னையின் பழமையானதும் மிக அதிக விலையுள்ள பகுதியுமாகும்.

ஆனால் இந்தப் பகுதிகளில் விற்க நிலங்கள் இல்லாததால் எதிர்கால ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத பகுதி இது. அதுபோல வடசென்னைப் பகுதிகளான தண்டையார்பேட்டை, பெரம்பூர், அயனாவரம் போன்றவற்றிலும் புதிதாக வீட்டுத் திட்டங்கள் தொடங்க நிலம் இல்லை.

ஆக சென்னையைப் பொறுத்தமட்டில் மேற்கு சென்னைப் பகுதிகளும் தென்சென்னைப் பகுதிகளுமே வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதிகள் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், பூந்தமல்லி, முகப்பேர், போரூர் ஆகிய மேற்குச் சென்னைப் பகுதி களைவிட ஓஎம்ஆர் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, இசிஆர் சாலை ஆகிய பகுதிகளில் வீடு விற்பனை அதிகமாக நடந்துள்ளது.

அதுபோலச் சென்னையில் இந்த அரையாண்டில் 101,212 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில் 66 சதவீதம் வீடுகள் தென்சென்னையில்தான் கட்டப்பட்டுள்ளன. 26 சதவீதம் மேற்குச் சென்னையில் கட்டப் பட்டுள்ளன என அந்த அறிக்கை சொல்கிறது. வடசென்னையிலும் நகரின் மிக அதிக விலையுள்ள மத்திய சென்னையிலும் சேர்த்து 8 சதவீதம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன.

மேற்கு வளர்கிறது

தென்சென்னைப் பகுதியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 75 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 69 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது இது பரவாயில்லாத நிலை. மேற்குச் சென்னையைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 22 சதவீதமாக இருந்த வளர்ச்சி இந்தாண்டு 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வெளிவட்டச் சாலை போன்ற பல திட்டங்களால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மத்திய சென்னையில் வளர்ச்சி 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. வடசென்னையில் -1

சதவீதமாகப் பின்தங்கியுள்ளது.

வெளிவட்டச் சாலை அமையவிருப்பதால் குத்தம் பாக்கம், செம்பரம்பாக்கம், மேற்கு பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருக்கும் நிலையங்களில் குறிப்பாக ஆலந்தூர், வடபழநி, அசோக்நகர் பகுதிகளில் மேலும் வளர்ச்சி பெறும் என அந்த அறிக்கை கூறுகிறது.