அழகாக இல்லை என்று அடி, உதை விவாகரத்துக்கு சம்மதிக்கும்படி மனைவி கழுத்து நெரிப்பு

சீனாவில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பவர், அழகாக இல்லை என்று கூறி மனைவியை அடித்து, உதைத்துள்ளார். மேலும் சென்னை வந்து மனைவியை மாமல்லபுரத்துக்கு அழைத்து சென்று விவாகரத்துக்கு சம்மதிக்கும்படி கழுத்தை நெரித்துள்ளார். புகாரின்படி மகளிர் போலீசார் அவரை தேடிவருகின்றனர். திருநெல்வேலி மாவட் டம் வள்ளியூரை சேர்ந்தவர் இசக்கியப்பன்.

 இவரது மகள் மகாலட்சுமி (29). இவருக்கும் மாமல்லபுரத்தை சேர்ந்த மீனாட்சியின் மகன் மண்கண்டன் (32) என்பவருக்கும் கடந்த 2,6,2010 அன்று திருமணம் நடந்தது. அப்போது, வரதட்சணையாக மகாலட்சுமியின் பெற்றோர் 40 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். மணிகண்டன் சீன நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். திருமணத்துக்கு பின் இருவரும் சீனா சென்றனர். ஒரு மாதத்தில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

மகாலட்சுமி அழகாக இல்லை என நண்பர்கள் கிண்டல் செய்வதாக கூறி, அடிக்கடி மணிகண்டன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. முதன்முதலாக கர்ப்பம் தரித்ததும், குழந்தை வேண்டாம் என கூறி, கரு கலைப்பு செய்துள்ளார். 6 மாதம் கழித்து மகாலட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆனார். அந்த குழந்தையும் பிறக்க கூடாது என கூறி மிரட்டியதால், மகாலட்சுமி, தனியாக இந்தியா வுக்கு திரும்பினார்.

 சென்னை வேளச்சேரியில் உள்ள தனது தந்தையுடன் தங்கினார். இந்நிலையில், மகாலட்சுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. மனைவி மற்றும் குழந்தையை பார்த்து சென்ற மணிகண்டன், பின்னர் வரவில்லை. சமீபத்தில் சீனாவில் இருந்து திரும்பிய மணிகண்டன், மாமல்லபுரத்துக்கு மனைவி, குழந்தையை அழைத்து சென்றார். நண்பர்கள் தன்னை கிண்டல் செய்வதாகவும், நீ அழகாக இல்லை என்றும் கூறி அடித்து உதைத்துள்ளார். 

மேலும், விவாகரத்து கடிதத்தில் கையெழுத்து போட்டுதரும்படி கூறி கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவரது குரல்வளை பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாமல்லபுரம் போலீசா ருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த மகாலட்சுமி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 15ம் தேதி மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில், மகாலட்சுமி புகார் செய்தார்.

 போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்துள்ளனர். மகளிர் போலீசார், காஞ்சிபுரம் எஸ்பி அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரை சந்திக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி மாமல்லபுரம் டிஎஸ்பி மோகனிடம் புகார் செய்தார். சம்பவத்தை கேட்ட டிஎஸ்பி, வழக்குப்பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மகளிர் இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை தேடிவருகிறார்..