காதலுக்கு மறுப்பு: தாயை விஷம் வைத்துக் கொல்ல முயன்ற பெண்

'பிரேக்கிங் பேட்’ என்ற டிவி சீரியலினால் தூண்டப்பட்ட இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் பிரிட்டனில் தன் தாயை கொடிய விஷத்தினால் கொலை செய்ய முயன்றது பரபரப்பாகியுள்ளது.

குந்தல் படேல் என்ற இந்திய வம்சாவளிப்பெண் 60 வயதான தன் தாய் மீனா படேல் என்பவரது டயட் கோக்கில் கொடிய விஷமான ஆப்ரின் என்ற விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் பானத்தில் உள்ள அமிலத்துக்கு எதிர்வினையாற்றியதால் விஷம் தாயாரின் உயிரைப் பறிக்கவில்லை.

குந்தல் படேல் கிராபிக் டிசைனர் வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் மீனா படேல் மேஜிஸ்ட்ரேட் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் வழியாகத் தனக்கு பழக்கமான நிராஜ் காகத் என்ற அமெரிக்கரைக் காதலித்து வந்த குந்தல் படேல் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் ஏதோ சதி செய்து திருமணத்தை தாயார் நிறுத்திவிட்டதாக ஆத்திரம் அடைந்த குந்தல் படேல் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இணையதள வலைப்பின்னல் மூலம் கள்ளச் சந்தையில் அமெரிக்க விற்பனையாளர் ஒருவரிடமிருந்து ஆப்ரின் என்ற கொடிய விஷத்தை வாங்கியுள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் நச்சுப்பொருள் ஒன்றை வாங்க இந்தப் பெண் இணையத்தின் மூலம் முயற்சி செய்து வெற்றியும் பெற்றார். இந்த நச்சுப் பொருள் மெழுகுவர்த்தியில் மறைத்து வைக்கப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. இதனையடுத்தே ஆப்ரின் என்ற கொடிய விஷத்தை இணையம் மூலம் வாங்கியுள்ளார். தனது நடவடிக்கைகளைத் தடம் காணாதவாறு சாமர்த்தியமாக மறைத்தும் இருக்கிறார் குந்தல் படேல். 

இவருக்கு ஆப்ரினை விற்ற அமெரிக்க டீலர் ஜெசி கோர்ஃப் என்பவரை மோப்பம் பிடித்த எஃப்.பி.ஐ. அவரை கைது செய்து விசாரணை செய்தது. அதில் இவர் யு.கே.யிற்கு விஷத்தை அனுப்பியது தெரியவர உடனடியாக எஃப்.பி.ஐ., ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்குத் தகவல் அனுப்ப குந்தல் சிக்கினார்.

இவர் மீதான கொலை முயற்சி வழக்கு இப்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.