தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பி.எஸ்

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் தேனி மாவட்டத்தை சேர்ந்தவரும் ஜெ.,வின் நம்பிக்கைக்குரியவருமான ஓ.பன்னீர்செல்வம் இக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று சென்னையில் நடந்த அ.தி.மு.க,. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும். இவர் நாளை கவர்னர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் முல்வராக பதவியேற்பார் என தெரிகிறது. இவரது வாழ்க்கை வரலாறு விவரம் வருமாறு: 

கட்சியின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜன., 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். 


இவர் 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2001 சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து, முதன்முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 19ம் தேதி, ஜெ., தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார். பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி, பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து செப்., 21ம் தேதி முதல்வராக பதவியேற்றார். 2002 மார்ச் 1ம் தேதி வரை பதவியில் இருந்தார். பின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றவுடன் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின் 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது. இத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்தார். 2011 சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்ட்டார். இம்முறை நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் இவர் மாலையில் கவர்னரை சந்திப்பார். தொடர்ந்து அவர் நாளை ( திங்கட்கிழமை) கவர்னர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.