பால் வாங்க வந்த சிறுமி... பாழாக்கிய வியாபாரி!

குழந்தைகள் பாலியல் வன்​கொடுமைக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தனி மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.

இது புதுவை சொல்லும் பாடம்.சர்க்கரை ஆலைக்கு பெயர் போன கிராமம் லிங்கா ரெட்டிப்பாளையம். அங்குள்ள அரசு தொடக்கப்​பள்ளியில் படித்து வந்த 9 வயது மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ஆறுமுகம் காட்டுமிராண்டித்​தனமாக சீரழித்​துள்ளார்.

                                       
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மீனாவிடம் பேசினோம். என்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறெந்த புள்ளைக்கும் இனி நடந்துடக் கூடாதுங்க. அதுக்காக நான் ஒத்தையா போராடிக்கிட்டு இருக்கேன். எனக்கு மூணு பெண் குழந்தைங்க. இங்கிருக்குற அரசு பள்ளிலதான் படிச்சிட்டிருக்காங்க. போன மாசம் ஊருல காவடி பூஜை நடந்தது. அப்ப என்னோட நடு புள்ளைய பால் பாக்கெட் வாங்க பக்கத்துல இருக்குற மளிகைக் கடைக்கு அனுப்பி வெச்சேன். பச்ச புள்ள... ஒன்பது வயசுதான் ஆகுது. அந்தப் புள்ளையை போய் கெடுத்து சீரழிச்சிட்டான் அந்தப் பாவி'' என நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறுகிறார் அவர்.

தொடர்ந்து பேசிய சிறுமியின் தந்தை பெருமாள், ''ஜூஸ்ல மயக்க மருந்து கொடுத்து பிஞ்சு குழந்தையின்னுகூட பார்க்காம நாசம் பண்ணியிருக்கான். நடந்தத வெளியே சொன்னினா உன்ன கொன்னுடுவேன்னு மிரட்டியிருக்கான். வீட்டுல சொல்ல பயந்துகிட்டு குழந்தையும் எதுவும் சொல்லாம இருந்திருக்கு. எப்போதும் துறுதுறுன்னு விளையாடிட்டு இருந்தவ அமைதியா இருந்திருக்கா. இத பத்தி இன்னொரு குழந்தைக்கிட்ட அவ பேசிட்டிருக்கும்போதுதான் எங்களுக்கே தெரிஞ்சது. உடனே அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போனப்பதான் குழந்தையோட 

                                        

பிறப்புறுப்பு வீங்கிப் போயிருக்குனு டாக்டருங்க சொன்னாங்க. மனசே வெடிச்சுப் போச்சுங்க. போலீஸ்ல புகார் கொடுக்க போனா, சாதாரண பிரிவுல ஆறுமுகம் மேல கேஸ் போட்டாங்க. போராட்டம் பண்ணுவோம்னு நாங்க எச்சரிச்ச அப்புறம்தான் இன்னும் கூடுதலான பிரிவுகளில் வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க. என் புள்ளைய மட்டுமில்ல, இதே கிராமத்தை சேர்ந்த இன்னும் மூணு பிள்ளைங்களை சீரழிச்சிருக்கான். மானத்துக்கு பயந்துகிட்டு அவங்க புகார் கொடுக்க முன்வரமாட்டுறாங்க'' என்றார் கோபத்தோடு.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்த லிங்கா ரெட்டிப்பாளையம் கிராமத்தினர், இப்போது ஆறுமுகம் மீது கொடுத்​துள்ள புகாரை வாபஸ் பெறும்படி தொந்தரவு செய்கிறார்களாம். மளிகைக் கடை ஆறுமுகம் மீது கூடுதல் பிரிவுகள் போடப்பட்ட அன்று இரவு 2 மணியளவில் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள ஒருவர் வீட்டை சமூக 
                                                     

விரோதிகள் கொளுத்த முயற்சி செய்துள்ளனர்.

''என் புள்ளைக்கு இப்படியொரு சம்​பவம் நடந்துடுச்சு... காப்பாத்துங்கன்னு ஊர் பெரியவங்ககிட்ட போய் நின்னதுக்கு, 'இங்க போ, அங்க போ’ன்னு விரட்டிவிட்டுட்டாங்க. எனக்கு யார் உதவியும் வேணாம்'' என்று உறுதியாக இருக்கிறார் சிறுமியின் தாய் மீனா.

மளிகைக் கடைக்காரர் ஆறுமுகத்தின் உறவினர்களிடம் பேசினோம். ''கிராமத்துல ரெண்டு மளிகைக் கடை வெச்சிருக்கார். அவருக்கே இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கு. அவரா இப்படின்னு அதிர்ச்சியா இருக்கு. போலீஸ் அவரை கைது செஞ்சு போன அப்புறம் அவங்க மனைவி தற்கொலை முயற்சி பண்ணினாங்க. எப்படியோ காப்பாத்திட்டோம்'' என்றனர்.

காட்டேரிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜிடம் பேசினோம். ''2012-ல் மத்திய அரசு கொண்டு வந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறுமுகம் மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை மிரட்டல் விடுத்தல் என ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். சிறப்பு நீதிபதி தலைமையில் வழக்கு நடைபெற உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும்'' என்றார்.

வெறிகொண்டவர்கள் திருந்த வேண்டும்!