தமன்னா படத்துக்கு நெட்டில் பிளாக் டிக்கெட்

தமன்னா படத்துக்கு பிளாக் டிக்கெட் விலையை இணைய தளத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.
எதையும் விற்கலாம் என்ற பாலிசியுடன் இணைய தளத்தில் சில விளம்பர வெப்சைட்கள் இருக்கின்றன. ஓசியிலேயே இதில் பொருட்களை போட்டோ பிடித்துப்போட்டு விற்பனை விலையை நிர்ணயிக்கலாம். இந்த வசதி இப்போது பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு சாதகமாக போய்விட்டது. சமீபத்தில் தமன்னா, மகேஷ்பாபு நடித்த ‘ஆகடு' என்ற தெலுங்கு படம் ஐதராபாத்தில் ரிலீஸ் ஆனது. 

பெரிய ஹீரோ படமென்றால் தியேட்டரில் கூட்டம் அலைமோதும். எவ்வளவுதான் போலீஸ் கெடுபிடி இருந்தாலும் சந்து பொந்து இண்டு இடுக்கில் நின்றபடி பிளாக் டிக்கெட் விற்பவர்கள் தங்களது சட்டவிரோத செயல்களை அரங்கேற்றிவிடுவது உண்டு. இதே பாணியில்தான் எவ்வளவுதான் பாதுகாப்பாக கண்காணித்தாலும் திருட்டுத்தனமாக புதுபட சிடிக்கள் மார்க்கெட்டுக்கு வந்துவிடுகிறது. 

ரெய்டு நடத்தி ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்தாலும் புற்றீசல்போல் மறுபடியும் அதன் விற்பனை தொடங்கிவிடுகிறது. பிளாக் டிக்கெட்டை பொறுத்தவரை தியேட்டருக்கு அருகில் நின்று விற்றுக்கொண்டிருந்தவர்கள் இணைய தள ஓசி விளம்பர வெப் சைட்களை தற்போது பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

தமன்னா படத்தின் டிக்கெட் பிளாக்கில் என்ன விலை என்பதை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளனர். ஏற்கனவே திருட்டு விசிடியால் திணறிக்கொண்டிருக்கும் திரையுலகினர் இப்போது இதுபோன்ற பிளாக் டிக்கெட் விற்பனையால் நொந்துபோய் இருக்கின்றனர். இதுபற்றி திரையுலகினரிடம் கருத்து கேட்டபோது, ‘சட்டம்தான் அதன் கடமையை செய்ய வேண்டும்' என்று அங்கலாய்க்கின்றனர்.