நண்டு தன் குஞ்சை சரியாக நடக்கச் சொன்னதாம்

அண்மைய நாட்களாக நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பேச்சு விலைவாசி ஏற்றம். மின்சாரம், டோல், பொது போக்குவரத்து கட்டணங்கள் விலையேற்றம் காணும் என அரசாங்கம் கோடி காட்டியுள்ளதால் பல தரபட்ட மக்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே சீனி மற்றும் பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டு விட்டது. எதிர்கட்சிகளும் சில இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு போராட்டம் நடத்தப்போவதாகும் மருட்டல் விடுத்து வருகின்றன. 

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த விலையேற்றம் அரச்சாங்கத்தின் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த சில சேவைகளின் விலையேற்றம் மக்களுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தாது என்று அரசாங்கம் கூறினாலும் வியாபாரிகள் பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் வகையில் பொருட்களின் விலையை ஏற்றுவதில் மும்முரம் காட்டுவதை மறுக்க முடியாது.

நாட்டின் நிதி நிலையை சரி செய்ய அரசாங்கம் எல்லாரையும் திருப்திபடுத்த முடியாத சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது உண்மையே.

இந்த விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க மக்கள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவூட்டலுக்கு இடையே அரசாங்கத் தரப்பிலும் சிக்கனம் கடைபிடிக்கப்பட்டு விரயமும் ஊழலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியமே.

ஒவ்வொரு வருடமும் தேசிய கணக்காய்வாளரின் அறிக்கை (Auditor General Report) வெளியிடப்படும் போதும் மக்கள் வரிப் பணம் பல வகைகளில் வீண் விரயம் செய்யப்படுவது அம்பலமாகிறது. இது போன்ற சம்பவங்கள் குறைந்த பாடாக தெரியவில்லை.

இது மக்களிடையே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும். அரசாங்கம் இதனை அதி முக்கிய விவகாரமாக கருதி அரசாங்கத் துறைகளில் நிலவும் பண விரய பலவீனத்தை சரி செய்ய வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளதோடு அந்த சீர் நடவடிக்கைகளின் அடைவு நிலையையும் மக்களுக்கு முறையாக தெரியப் படுத்த வேண்டும்.

இது நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டால்தான் அரசாங்கத்தின் விலையேற்ற நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனபக்குவம் வரும். இல்லையேல் “நண்டு தன் குஞ்சை சரியாக நடக்கச் சொன்ன” கதையாகிவிடும்.