பாலியல் பலாத்காரம் செய்து மேடை பாடகி கொடூர கொலை

வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு நிர்வாண நிலையில், மேடை பாடகி உடல் கிடந்தது. அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஓசூர் அருகே மூக்கொண்டபள்ளியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30). இவரது கணவர் தர்மன். இவர்களின் மகள் பிரியதர்ஷினி (11). கணவரை பிரிந்து ஜெயந்தி தனது மகளுடன், மூக்கொண்டப்பள்ளி எம்.எம்.நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். தர்மன் பெங்களூரில் தங்கி உள்ளார். பாடகி மற்றும் நடன கலைஞரான ஜெயந்தி, இசை கச்சேரிகளுக்கு சென்று வந்தார். மகள் பிரியதர்ஷினி, கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரியில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

 நேற்றில் இருந்து ஜெயந்தி வீட்டின் கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது. ஜெயந்தியின் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், இன்று காலை ஜன்னல் வழியாக பார்த்த போது தரையில் ரத்த கறை படிந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிப்காட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஜெயந்தி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் அறை முழுவதும் உறைந்த நிலையில் இருந்தது. தகவல் அறிந்த எஸ்பி கண்ணம்மாள், ஏஎஸ்பி ரோகினி பிரியதர்ஷினி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஜெயந்தி உடல் நிர்வாண நிலையில் கிடந்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாடகியான ஜெயந்தி கச்சேரிகளுக்கு சென்று வந்ததால் பலருடன் பழக்கம் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓசூரில் அடிக்கடி நடந்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.