ஜெயலலிதாவின் 21 நாள் சிறைவாசம்..

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தை இடம்மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு சிறப்பு நீதிமன்றம் மாற்றப்பட்டதுடன், தீர்ப்பு தேதியும் செப்டம்பர் 27-க்கு மாற்றப்பட்டது.

# செப்டம்பர் 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர். முதலில் 11 மணிக்கு தீர்ப்பு வருவதாக இருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டு 12.15 மணிக்கு, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அறிவித்தார். தண்டனை விவரம் மதியம் ஒரு மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

# மாலை 5.45 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை என்றும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் என்று அறிவிக்கப்பட்டது.

# தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அன்று இரவு கேழ்வரகு உணவும் மற்றும் கோதுமை சப்பாத்தியும் வழங்கப்பட்டது.

# ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்த தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

# செப்டம்பர் 28-ல் ஜெயலலிதாவை சந்திக்க, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சென்றனர். அவர்கள் யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை. புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் செப்டம்பர் 29-ம் தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள் அனைவரும் கண்ணீர் மல்க பதவியேற்றனர்.

# செப்டம்பர் 30-ல் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இந்த மனுவை விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரித்து, அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மீண்டும் மனு செய்யப்பட்டது. பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார். இந்த மனு அக்டோபர் 7-க்கு ஒத்திவைக்கப்பட்டது. தசரா விடுமுறை முடியும் வரை அதிமுகவினர் காத்திருந்தனர்.

# அக்டோபர் 7-ல் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு, நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது. ராம் ஜெத்மலானி வாதாடினார். அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று கூறியதால், ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், சுமார் ஒரு மணி நேரம் வரை அதிமுகவினர் தமிழகமெங்கும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக பிறகு தெரியவந்ததால் மீண்டும் அதிமுகவினர் சோகத்தில் மூழ்கினர்.

# அக்டோபர் 9-ம் தேதி ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் சசிகலா உள்ளிட்ட மற்ற மூவரும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இந்த மனுக்கள் முதலில் 14-ம் தேதி விசாரணைப் பட்டியலுக்கு வரும் என்றனர்.

# அக்டோபர் 17-ம் தேதிதான் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தத்துவின் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. பிரபல குற்றவியல் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறு இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்றும் வாதாடினார்.

# பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜாமீன் அளித்து நேற்று உத்தரவிட்டார். பிற்பகலில் கர்நாடகா பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து ஜெயலலிதா விடுதலையானார்.