யாரைக் குத்துகிறது 'கத்தி' - முதல் பார்வை

கடுமையான போராட்டங்களைக் கடந்து, திரைக்கு வந்துள்ள நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' பேசுவது 'போராட்டங்கள்' பற்றிதான் என்பதில் தொடங்குகிறது ஆச்சரியங்கள்.

கிராமத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நகரத்தில் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும்' என்ற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்ய, 'மாஸ்' முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் மூலம், இணையத்தில் கலாய்ப்பதற்காகவே விஜய் படம் பார்ப்பவர்கள் மீது முதலில் பாய்ந்திருக்கிறது கத்தி.

இரட்டை வேடம், ஆள்மாறாட்டம், ஊறுகாய்க் காதல், உறுதுணை நட்பு என்ற ஃபார்முலா மூலம், தான் சொல்ல வரும் கதையை 2 மணி 46 நிமிடங்களுக்கு நீட்டிச் சொல்லியிருப்பது, விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களை சோதிக்க ஏ.ஆர்.முருகதாஸ் வைத்த கத்தி.

விருதுகளுக்காகவும், சர்வதேசப் பட விழாக்களுக்காகவும் மட்டுமே விவசாயிகளின் அவலத்தையும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல்களையும் பதிவு செய்ய முற்படும் நிலையில், இந்த விவகாரங்களை வணிக நோக்கம் கொண்ட சினிமாவில், மாஸ் நாயகனை வைத்துச் சொல்ல முற்பட்டிருப்பது, கத்தி... உயிர் காக்கும் மருத்துவ அறுவை சிகிச்சைக்கும் உரியதுதான் என்பதை உணர்த்துகிறது.

வழக்கமானா பழி வாங்குதல், ரவுடியிசம் சார்ந்த கதைகளில் 'நடித்து' வந்தவர், மாஸுக்குள் க்ளாஸ் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, துணிச்சல் மிக்க வசனங்களை உத்வேகத்துடன் உதிர்த்து, தனது 'தம்பி'களையும் தாண்டிய ரசிகர்களைக் கவர்ந்திழுக்க முயற்சித்திருப்பது, தனது கேரியரை கத்தி மூலம் கூர்தீட்டிக் கொண்டுள்ளது சிறப்பு.

விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் எங்கெல்லாம் ஆரவாரம் செய்வர் என்பதைக் கணித்து, அதற்கேற்றவாறு பின்னணி இசையை வழங்கியிருக்கும் அனிருத்தின் பங்களிப்பு, கத்திக்கு கெத்து சேர்க்கிறது. ஆனால், 'செல்ஃபி புள்ள' உள்ளிட்ட பாடல்களைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம், விஜய் ரசிகர்களை ஏமாற்றும் 'மொக்கைக் கத்தி'த்தன்மையில் முன்னிலை வகிக்கிறது.

முதல் 40 நிமிடக் காட்சிகளால் ரசிகர்களுக்கு இது மொக்கைக் கத்திதான் என்று சலிப்பை ஏற்படுத்திவிட்டு, இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக்காட்சியின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் தனது 'டச்' உடன் கெத்தான 'கத்தி'தான் என்று நிரூபித்தது கவனிக்கத்தக்கது.

கதைக்கு ஒட்டாத சமந்தாவின் கதாப்பாத்திரம், ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளப்படும் காதல், சிரிக்கவைக்க ஸ்கோப் இல்லாத நண்பர் வேடத்தில் சதிஷ், தோற்றத்திலும் ஸ்டைலிலும் மட்டுமே 'பந்தா' காட்டும் கார்ப்பரேட் வில்லன் நீல் நிதின் முகேஷ்... இப்படி கத்தியில் நீண்டிருக்கின்றன 'அட்டகத்தி'களின் பட்டியல்.

கார்ப்பரேட் நிறுவனங்கங்களின் முதலாளித்துவ அணுகுமுறைகளைச் சொல்ல முற்பட்டதில் வல்லமையுடன் செயல்பட்டுள்ள கத்தி, அதைக் காட்சிப்படுத்துவதில் பல இடங்களில் குழந்தைத்தனமாக செயல்பட்டு, உறையில் உறங்கும் கத்தியாகிவிட்டது.

பொதுவுடமையின் மகத்துவத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் "நம் பசி தீர்ந்த பிறகு, நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது. இதுதான் கம்யூனிசம்" உள்ளிட்ட வசனங்கள் மூலம் சொல்ல முற்பட்டுள்ள கத்தியில், விஜய் ரசிகர்கள் கைதட்டலை அள்ளுவதற்காக வசனங்கள் வைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. கைதட்டலை மீறி, ரசிகர்களைச் சென்றடையும் செய்தி, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வெறும் 'வசனம்' மட்டுமே போதாது என்று புத்தியும் சொல்லித் தருகிறது கத்தி.

கெட்டப்களில் வித்தியாசம் காட்டாமலும், தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் மட்டுமே போதும் என்ற எண்ணம் இல்லாமலும் விஜய் கத்தியில் காட்டியிருக்கும் சிரத்தை, மாஸ் ஹீரோக்கள் எனக் கருதப்படுவோருக்கு புதிய பாதையைக் காட்டுவதற்கு கோடு கிழிக்கப் பயன்பட்டுள்ளது.

மீடியாக்களின் நிஜ முகத்தைச் சித்தரித்த விதம், கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை தோலுரிக்கும் காட்சிகளில் உள்ள மேம்போக்கான தன்மைகள், விவரம் அறியாதவர்களின் காதுகளைக் குத்துவதற்குப் பயன்பட்ட கத்தி என்றே சொல்லலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் அவல நிலையையும், விவசாயிகளின் போராட்டங்களை அலட்சியப்படுத்தும் நகரவாசிகளை விமர்சனப் பார்வையோடு சுட்டிக்காட்டிய விதத்திலும், மாஸ் படத்தில் நல்ல மெசேஜ் சொல்ல முனைப்பு காட்டிய விதத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்திருப்பது, பார்க்க வேண்டிய பயனுள்ள 'கூர்தீட்டிய கத்தி'யே!