ஸ்மார்ட் நகராக சென்னைக்கு தகுதி இருக்கிறதா?

இந்தியாவின் எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களுக்கு 'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்தை பெறுவதற்காக விண்ணப்பிக்க கெடு நெருங்கிவிட்டது. பட்டியலை அனுப்ப இதுவே கடைசி வாரம்.

இந்நிலையில், மற்ற நகரங்களின் வளர்ச்சியுடன் சென்னை நகரின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கவலையே எழுகிறது.

ஏனெனில் சென்னை மாநகரின் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் ஒரு நூற்றாண்டு பின் தங்கியே இருக்கின்றனர் என சொல்ல வேண்டும். ரயில் நிலையங்களில் சீஸன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கவும், மின்வாரிய மையங்களில் மின் கட்டணம் செலுத்த இன்னமும் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருக்கும் கூட்டத்தை பார்க்கும்போதும் இது உண்மையோ என்றே தோன்றுகிறது.

இத்தனைக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை நகரில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. சென்னை நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 60 லட்சம். இதில் பாதிக்கும் மேலானோர் ஆன்லைனை உபயோகிக்கின்றனர்.

இருப்பினும், பல்வேறு அரசு இணையதள சேவைகள் எளிமையாக இல்லாததாலும், சில முக்கிய அரசுத் துறைகள் ஆன்லைன் சேவையை இதுவரை துவக்காததாலும், கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளுக்கு மக்கள் இன்னமும் வரிசையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது.

மற்ற மாநிலங்களின் முக்கிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையின் நிலை அப்படியேதான் இருக்கிறது. சென்னை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்படவில்லை; அடுத்த வருடம் இயங்கப் போகிற மெட்ரோவில் மொபைல் செயலி பொருத்தப்படவில்லை. 'காகிதங்கள் இல்லா அரசு செயல்பாட்டு முறை'-க்கு இன்னமும் நாம் ஆயத்தமாகவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும், ஒவ்வொரு முறையும் நேரில் வந்து படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள அட்டையைக் கொடுத்த பின்னர்தான் மாதாந்திர ரயில்வே பாஸ் பெற முடிந்தது என்கிறார் ராஜ் செருபால் என்னும் சென்னைவாசி. உலக தகவல் தொழிநுட்பத்திற்கான தலைநகராய் இருக்க வேண்டிய இந்தியா இந்த விஷயங்கள் எதையும் கண்டுகொள்வதில்லை எனவும் ஆதங்கப்படுகிறார்.

சென்னை நகரம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பெரிதும் பின்னடைந்துள்ளது. கிராமங்களைப் நவீனப்படுத்துதலுக்கான முந்தைய வருட பட்ஜெட்டைக் கொண்டு, குறைந்த பட்சம் 1000 அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி இருக்க முடியும். 2012-ம் ஆண்டில் 600 பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டு பணமும் செலவிடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது என்கிறார் சென்னை மாநகரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர். 50-க்கும் குறைவான பேருந்துகளே இப்போது ஜி.பி.எஸ். கருவியுடன் இயக்கப்படுகின்றன.

சென்னையின் நிலை இப்படி இருக்க மற்ற மாநகரங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் வீச்சோடு செயல்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, நகரத்தைக் கண்காணிக்கும் வகையில் மொபைல் செயலித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டின் மத்தியில் பெங்களூருவின் 6,500 பேருந்துகளும் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அகமதாபாத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஸ்மார்ட் நகராக சென்னைக்கு தகுதி இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது.