பாஜக ஒரு கேப்டன் இல்லாத கப்பல்

நரேந்திர மோடி தனது டெல்லி பிரச்சாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ‘அராஜகவாதி’ கோரலை சூசகமாகத் தாக்க அதற்கு பதிலடி கொடுத்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களை அடுத்து பாஜக ஆடிப்போயிருக்கிறது என்றும் அதனால் தன்னம்பிக்கையான திட்டங்கள் எதுவும் இல்லாமல் தனிநபர் தாக்குதல்களில் மோடி இறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
புதுடெல்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ். | படம்: பிடிஐ.
டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் காவிக்கட்சி ஒரு ‘கேப்டன் இல்லாத கப்பல்’. மேலும் ஆம்ஆத்மி கட்சியின் 49 நாட்கள் டெல்லி ஆட்சி மீது பாஜகவுக்கு குறைகள் இல்லை என்றே தெரிகிறது, ஆட்சி நல்லபடியாக இருந்தது என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

"எங்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்று அவர்கள் விமர்சிக்கின்றனர். பிறகு மின்கட்டணத்தைக் குறைத்தது யார்? இலவச குடிநீர் வழங்கியது யார்? மின்சார நிறுவனங்கள் மீது தணிக்கைக்கு உத்தரவிட்டது யார்? 2ஜி, மற்றும் நிலக்கரி ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆட்சி செய்ய தெரியுமா என்ன?

எங்களுக்கு ஆட்சி நடத்தவும் தெரியும், தர்ணா செய்யவும் தெரியும்." என்று கூறிய கேஜ்ரிவால், அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக நடத்திய மாபெரும் உண்ணா விரதப் போராட்டத்தைக் கண்ட ராம் லீலா மைதானத்தில் பிரதமர் மோடி ஆம்ஆத்மி கட்சியை சிறுமைப்படுத்திப் பேசியது பிரதமருக்கு அழகல்ல என்றார். 

மேலும், இலவச மின்சாரம் என்ற மோடியின் புதிய வாக்குறுதி மீது விமர்சனம் செய்த கேஜ்ரிவால், கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை, லோக்சபா தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் புதிய வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார், என்று 173, நார்த் அவென்யூவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அவசரமாக செய்தியாளர்களை அழைத்துப் பேசினார் கேஜ்ரிவால்.