பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் பேராபத்து!

ஜாக்குலின் ஃபாக்ஸ், அமெரிக்காவின் மிசௌரியைச் சார்ந்த 62 வயது பெண்மணி. இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் இவருக்கு கர்ப்பப்பை ஒவேரியன் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இந்நிறுவனத்தின் பொருட்களைப் பயன்படுத்தியதாலேயே இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி, இவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை தெரிவிக்க தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 72 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய பணம் 493.50 கோடி ரூபாய் ) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிறுவனம் தொடர்பாக சுமார் 1000 வழக்குகள் மிசௌரி மாநில நீதிமன்றத்திலும், 200 வழக்குகள் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

இந்நிறுவனம் தயாரிக்கும் பவுடரில் கான்சர் செல்லை தூண்டும் ஒரு ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது தெரிய வந்ததும் மற்ற நிறுவனங்கள் இந்த ரசாயனப் பொருளை உபயோகிப்பதை நிறுத்திவிட்டது. ஆனாலும், ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனம் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளது. இதனால், மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, மதுபானம் முதல் குழந்தைகள் அருந்தும் பால் வரை கலப்படம்தான். எதையும் நம்பி பயன்படுத்த முடியாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.